த.தே.கூட்டமைப்பிற்கு ஆதரவு வழங்க தயார்: ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களை அமைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு நிபந்தனையற்ற ஆதரவினை வழங்க தயார் என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உபதலைவர் இரா.துரைரெட்ணம் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலூடாக பலதரப்பட்ட முரண்பாடுகள் தோன்றியுள்ளன. இந்த தேர்தல் முறையானது பல வருடங்களுக்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்டபோது பலதரப்பட்ட முரண்பாடுகளை தோற்றுவித்த நிலையில் கைவிடப்பட்டிருந்தது. தற்போது அது மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அண்ணளவாக 70 ஆயிரம் வாக்குகளையும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி 46 ஆயிரம் வாக்குகளையும், தமிழர் விடுதலைக் கூட்டணி 26 ஆயிரம் வாக்குகளையும் பெற்றுள்ளன.

இருந்தும் ஒரு கட்சி தனித்து ஆட்சி அமைக்கக் கூடிய சூழல் மட்டக்களப்பு மாட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் இல்லை. எனவே ஏனைய கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டிய தேவையே கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.