போர்க்குற்றவாளிகளை அரசு காப்பாற்றியே தீரும்: வடக்கு முதலமைச்சர் உறுதி

போர்க்குற்றவாளிகளை இலங்கை ஆட்சியாளர்கள் ஒருபோதும் தண்டிக்கமாட்டார்கள் என்றும் மாறாகக் காப்பாற்றுவார்கள் எனவும் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற்றுவரும் நிலையில் போரில் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத் தமிழ் மக்களின் பிரதிநிதியாக இலங்கை மீது எப்படியான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனக் கருதகிறீர்கள்? என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

போர்க்குற்றங்கள் செய்தவர்களைத் தண்டிப்பதாக இலங்கை அரசு பாசாங்கு செய்தாலும் உண்மையில் அவர்களைத் தண்டிக்காது.

மாறாக அவர்களை மன்னிக்கும். இதற்குச் சிறந்த உதாரணம் காணாமற்போனவர்களுக்கு என்ன நடந்தது? எனக் கேள்வி எழுப்பப்பட்டபோது காணாமற்போனவர்கள் இறந்திருக்கலாம் எனவும், இறந்துவிட்டார்கள் எனவும் பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர் இப்போது காணாமற்போனவர்களைக் கண்டறிவதற்காக அலுவலகம் ஒன்றை உருவாக்குகிறார்கள்.

ஆகவே ஒரு மக்கள் கூட்டத்திற்கு எதிராகக் குற்றமிழைத்தவர்களை தண்டிக்கவேண்டியது ஒரு அரசின் கடமையாகும்.

அதனை இலங்கை அரசு ஒருபோதும் செய்யாது. அவர்கள் குற்றவாளிகளுக்காகப் பரிந்து பேசுவார்கள்.

அதுபோல் உள்நாட்டு விசாரணை என்பதும் குற்றவாளிகளை பாதுகாப்பதற்கான விசாரணையாக இருக்குமே தவிர குற்றவாளிகளை அடையாளம் கண்டு தண்டிப்பதற்கான விசாரணையாக ஒருபோதும் அமையாது.

எனவே, நான் 2015ஆம் ஆண்டும், 2017ஆம் ஆண்டும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்குக் கடிதம் எழுதியிருந்தேன். இலங்கையைச் சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தும்படி. அதேபோல் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நேரில் வந்தபோதும் அதனையே கூறினேன்.

மேலும், இலங்கை தொடர்பான பிரேரணையை அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஐ.நா. மனித உரிமைகள் சபைக்குக் கொண்டுவந்தன.

அவர்கள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காகவே பிரேரணையைக் கொண்டுவந்ததாகப் பாசாங்கு செய்தாலும், உண்மையில் அவர்கள் பூகோள அரசியல் நலன்களின் அடிப்படையிலேயே அந்தப் பிரேரணையை கொண்டுவந்தார்கள்.

அதாவது இலங்கைக்குள் சீனாவின் தலையீடு அதிகரித்தமை போன்ற பல்வேறு பூகோள நிலைமைகளைக் கருத்தில் கொண்டே பிரேரணை கொண்டுவந்தார்கள்.

ஆனால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காகவே பிரேரணை கொண்டுவந்தோம் எனப் பாசாங்கு செய்தாலும் அவா்களுக்குப் பொறுப்புள்ளது.

ஆகவே, இலங்கை தொடர்பாக சரியான தீர்மானம் எடுப்பதற்கும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைப்பதற்கும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பிரேரணையைக் கொண்டு வந்த நாடுகள் தொடர்ந்தும் ஒத்தாசை புரியவேண்டும்.

இதேவேளை, அதேபோல் மக்களும் ஒன்றிணைந்து போராட்டங்களை நடத்துவதன் ஊடாக அழுத்தங்களை கொடுக்கவேண்டும் எனவும் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.