கூட்டமைப்பின் பின்னடைவுக்கான காரணத்தை வெளியிட்ட மாவை சேனாதிராஜா!

வட மாகாணசபையை நம்பி மக்கள் ஏமாந்துவிட்டனர், அதுவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின்னடைவுக்கு காரணம் என தமிழரசுக்கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

வவுனியா நகர கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

மத்திய அரசாங்கத்திற்கு சில அதிகாரங்களும், மாநில அரசாங்கத்திற்கு கூடுதல் அதிகாரங்களும், உள்ளூராட்சி மன்றங்களுக்கும் அதிகாரம் பகிரப்படும் என இடைக்கால அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுவே உண்மையும். ஆனால் அது கேள்விக்குறியாகியுள்ளமை குறித்து ஆழ்ந்த கவலை கொண்டிருக்கின்றோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

தென்னிலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்கள், உள்ளூராட்சி மன்றங்களில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கள் காரணமாகவே இது ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் உங்கள் பிரதிநிதிகளாக இருக்கின்ற எமக்கு முன்னரையும் விட அதிகமான பொறுப்பு உள்ளது என்றும் கூறியுள்ளார்.

கடந்த வரவு செலவுத்திட்டத்தில் 16 திட்டங்கள் நேரடியாக வடக்கு, கிழக்கிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. எங்கள் தேர்தல் அறிக்கையில் கூட மக்களுக்கு விளங்கப்படுத்தியிருந்தார்கள்.

வடக்கில் ஒரு மாகாணசபை நீதியரசரை ஒரு முதலமைச்சராக கொண்டும், மருத்துவர்கள் ,பொறியிலாளர்கள், சட்டத்தரணிகள், கல்வி கற்றவர்கள் பட்டதாரிகளாக இருப்பவர்களுடன் சுமார் 50 வீதமானவர்கள் இளம் உறுப்பினர்களை கொண்டு அமைந்துள்ளது.

இன்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் எமது பிரச்சினைக்கு புதிய அரசியல் அமைப்பினால் எங்கள் மண்ணில் விடுதலை ஏற்பட வேண்டும் என நாங்கள் எல்லோரும் எதிர்பார்த்தோம்.

அதை நாம் இன்றும் அடையவில்லை. அரசாங்கத்தினை நாம் பல தடவைகள் வற்புறுத்தினோம். இன்று எமக்கிருக்கின்ற ஒரே பலம் உலக நாடுகளினுடைய ஒன்றுபட்ட ஏகமனதாக இலங்கை மீது 2015 இல் எடுக்கப்பட்ட தீர்மானம்.

அத்துடன் எமக்குள்ள வாக்குப்பலம். ஆகவே அரசாங்கம் எம்மை நீண்ட காலத்திற்கு ஏமாற்றிக்கொண்டிருக்க முடியாது. நாம் விரைவில் ஒரு தீர்மானம் எடுக்கவேண்டி வரும் என்றும் கூறியுள்ளார்.

இதேவேளை, தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு ஆட்சியை கவிழ்த்து விட வேண்டும் என்ற நிலைப்பாடுகளால் நாம் அதற்கு ஆயத்தம் செய்யவேண்டியவர்களாக இருக்கின்றோம் என்றும் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.