சம்பந்தனின் கரங்களை நாம் பலப்படுத்த வேண்டும்: கோடீஸ்வரன்!

இந்த நாட்டில் அனைத்து உரிமைகளுடன் தமிழர்கள் வாழவேண்டும் என்பதற்காக ஆயிரக்கணக்கான போராளிகளும், இலட்சக்கணக்கான பொதுமக்களும் தமது உயிரை தியாகம் செய்துள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவர்களின் இலட்சியத்தையும், நாங்கள் நிறைவேற்ற வேண்டியவர்களாகவுள்ளோம், அதை விடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேறு பாதையில் பயணிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாணம் செய்யும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியிலும் தமிழர்களின் உரிமையினை வென்றெடுப்பதற்காக தியாக மனப்பான்மையுடன் ஒரு தந்திரோபாய செயற்பாடுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மேற்கொண்டு வருகின்றார், அவரது கரத்தினை நாங்கள் பலப்படுத்த வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களின் தேசியத்தினை வெல்வதற்காக தமிழர்களின் உரிமையினை வெற்றிகொள்வதற்காக உருவாக்கப்பட்ட கட்சி.

கிழக்கு மாகாணசபையின் ஆட்சியதிகாரம் கடந்த காலத்தில் மாற்று சமூகத்தின் கைகளுக்கு சென்றபோதிலும் எமது கட்சியை சேர்ந்தவர்களினால் ஓரளவு அபிவிருத்திகளை செய்யமுடிந்துள்ளது.

எதிர்வரும் கிழக்கு மாகாணசபை தேர்தலில் கிழக்கு மாகாணத்தின் ஆட்சியதிகாரத்தினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றி தமிழ் முதலமைச்சரை நியமிக்கவேண்டும்.

அதற்காக அனைவரும் ஒன்றுபட்டு உழைக்கவேண்டும். வடக்கு, கிழக்கு இரண்டு மாகாணங்களிலும் தமிழ் முதலமைச்சரை கொண்டுவந்து இரண்டு மாகாணங்களிலும் தமிழன் முதலமைச்சராக இருக்கின்றான்.

என்ற செய்தியை சர்வதேசத்திற்கு எடுத்துக்கூற வேண்டிய கடமைப்பாடு அனைவருக்கும் உள்ளது.

இரண்டு மாகாணத்திலும் தமிழர்கள் முதலமைச்சராக வரும்போது வடக்கு, கிழக்கு இணைப்பு என்பது சாத்தியமான விடயமாக மாறும் நிலையேற்படும். வடக்கு, கிழக்கு இணைந்து ஒரு சமஸ்டி முறையான ஆட்சியின் அதிகாரங்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமானால் வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்கள் முதலமைச்சராக இருக்கவேண்டும். இரண்டு மாகாணங்களும் ஒன்றுசேர்ந்து எங்களது கனவை நனவாக்க வேண்டும்.

வடக்கு, கிழக்கு இணைந்த ஒரு சமஸ்டி முறை ஆட்சியை ஏற்படுத்துவதற்காக, அந்த அதிகாரத்தினை பெறுவதற்காக சுதந்திர சுவாசக்காற்றினை சுவாசிப்பதற்காக ஒவ்வொரு தமிழனும் அயராது உழைக்கவேண்டும். அந்த வெற்றியை எதிர்வரும் மாகாணசபை தேர்தல் மூலம் வெளிப்படுத்தவேண்டும்.

தமிழர்கள் சுயநிர்ணயத்துடன் வாழும் வரையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு போராடிக்கொண்டிருக்கும். அதற்கான வலுவினை உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் வழங்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.