தமிழர்களின் உரிமையை வென்றெடுக்க ஓரணியில் திரண்டு குரல் கொடுப்போம்: மாவை எம்.பி. அறைகூவல்

“தமிழர்களின் உரிமைகளை நாம் வென்றெடுக்கவேண்டும். இதற்காக நாம் அனைவரும் ஓரணியில் திரண்டு குரல் கொடுக்கவேண்டும். இதை நாம் செய்வோம் என்ற நம்பிக்கையில்தான் எமது மக்கள் எம்மைப் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுத்துள்ளார்கள்.

எனவே, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் என நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயற்படுவோம்” என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலுள்ள உள்ளூராட்சி சபைகளுக்குத் தெரிவுசெய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் நேற்றுக்காலை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

யாழ். நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் வடக்கு மாகாண அவைத் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமான சி.வி.கே.சிவஞானம் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது தெரிவுசெய்யப்பட்ட கட்சியின் உறுப்பினர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, ஈ.சரவணபவன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு கூறினார்.