நித்தகைகுளத்தை பார்வையிட்ட வடமாகாண விவசாய அமைச்சர் தலைமையிலான அணி!

முல்லைத்தீவு – மணலாறு பிரதேசத்திற்கு உட்பட்ட நித்தகைகுளத்தை வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் தலைமையிலான அணி சென்று பார்வையிட்டுள்ளனர்.

மக்களின் கோரிக்கைக்கு அமைவாக குறித்த குளத்தை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இன்று காலை 9.30 மணியளவில் இந்த பகுதிக்குச் சென்றுள்ளனர்.

மாவட்ட செயலகம் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்திக்குழுக் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு கூட்டங்களில் இந்த குளத்தினையும், அதற்கான வீதிகளையும் புனரமைத்து தருமாறு மக்களால் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் குளத்தினை பார்வையிட்டு அதனை அபிவிருத்தி செய்யும் நோக்கத்தோடு வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவனேசன்,முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், வடமாகாண நீர்ப்பாசன பொறியியலாளர், முல்லைத்தீவு மாவட்ட பிரதி நீர்ப்பாசன பொறியியலாளர், விவசாய திணைக்களம் மற்றும் கமநல சேவை திணைக்களங்களின் அதிகாரிகள் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், கமக்கார அமைப்பின் பிரதிநிதிகள் என பலரும் குளத்தை சென்று பார்வையிட்டுள்ளனர்.

இதன்போது, குளத்தின் உடைவு ஏற்பட்டுள்ளகலிங்கு பகுதி அணைக்கட்டு மற்றும் அதன்கீழ் செய்கை பண்ணப்பட்ட வயல்கள் மற்றும் நீர்பாசன வாய்க்கால்கள் என்பனவற்றை பார்வையிட்டு அவற்றை அபிவிருத்தி செய்து மக்களுக்கு வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மாவட்ட செயலாளர் தெரிவிக்கையில்,

விவசாயிகளால் போர் காலத்திற்கு முன்பாக பாதிக்கப்பட்ட வயல் நிலங்களையும், குளத்தினையும் மீளவும் பயன்படுத்துவதற்கு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அதற்கமைவாக கைவிடப்பட்ட குளத்தினையும் அதன்கீழான விவசாய நிலங்களையும் மீளவும் பயிர்செய்கையில் ஈடுபடுத்த நாங்கள் பார்வையிட்டுள்ளோம்.

இதன்மூலமாக இந்த குளத்தினை விவசாய திணைக்களம் விவசாய மக்களின் உதவியுடன் புனரமைத்து மக்களுக்கு வழங்க எண்ணியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை இங்கு கருத்து தெரிவித்த வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவனேசன்,

நித்தகை குளம் 1982ஆம் ஆண்டிற்கு முற்பட்ட காலத்தில் மக்கள் இந்த வயல் செய்கையில் ஈடுபட்டு வந்துள்ளார்கள். அது திருத்தவேலைகள் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் போது போர் ஏற்பட்டதால் அது நிறுத்தப்பட்டுள்ளது.

இதன் கீழ் பல வயல் நிலங்கள் இன்றும் செய்கை பண்ணப்படாமல் பாழடைந்து போயுள்ளது.

மேலும், பாழடைந்து போயுள்ள இந்த குளத்தினை திருத்தி மக்களுக்கு வழங்குவதற்கா மாவட்ட செயலாளரின் உதவியினை பெற்று நீர்பாசன திணைக்களத்தின் ஊடாக அபிவிருத்தி செய்ய எண்ணியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.