படையினரிடம் கோரிக்கை விடுத்துள்ள வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன்!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்புப் பகுதியில் படையினர் வசமிருந்து ஆறு மாதகாலத்திற்குள் விடுவிக்கப்படும் எனக்குறிப்பிடப்பட்ட காணி இதுவரை விடுவிக்கப்படவில்லை என்று வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “பொது மக்களுக்கு சொந்தமான காணிகள் அனைத்தும் விடுவிக்க வேண்டும்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் முன்பாக 682ஆவது படைப்பிரிவினது கட்டுப்பாட்டிலிருக்கின்ற காணிகளை விடுவிக்குமாறு, காணி உரிமையாளர்கள் கோரிக்கைவிடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் இந்தக்காணிகளை விடுவிக்குமாறு மக்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்தனர். இதனையடுத்து ஒரு தொகுதி காணிகள் மாத்திரம் விடுவிக்கப்பட்டன.

படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற காணிகள் விடுவிப்பு தொடர்பில்முற்கட்டமாக 7.2 ஏக்கரும் இரண்டாம் கட்டமாக 10 ஏக்கரும் மீதமாகவுள்ள இரண்டு ஏக்கர் காணிகளையும் ஆறு மாத காலத்தில் விடுவிப்பதாக படையினர் தெரிவித்திருந்தனர்.

இதில் முதற்கட்ட காணிகள் மாத்திரமே விடுவிக்கப்பட்டிருக்கின்றது. ஏனைய காணிகள் விடுவிக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிப்பததற்கு படையினர் இன்னமும் தயாரகவில்லை. எனினும், மக்களுக்குச் சொந்தமான காணிகளை படையினர் விடுவிக்க வேண்டுமென்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.”