பிரபாகரனால் உருவாக்கப்பட்ட த.தே.கூட்டமைப்பின் சரிவிற்கு முக்கிய காரணங்கள் இரண்டு: வியாளேந்திரன்

பிரபாகரனால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சரிவிற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த காலத்தில் வடக்கு, கிழக்கில் பல வெற்றிகளை பெற்றுவந்துள்ளது. அதன் ஒரு கட்டமாக இந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலும் அமைந்துள்ளது.

கடந்த கால தேர்தலுடன் ஒப்பிடும்போது இந்த உள்ளூராட்சிசபை தேர்தல் கூடுதலான சவால்களை கொண்டதாக இருந்தது. ஒரு புதிய தேர்தல் முறையினை முதன்முறையாக எதிர்கொண்ட தேர்தலாகவும் அமைந்திருந்தது.

வடக்கு, கிழக்கில் ஒப்பீட்டளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சரிவினை சந்தித்தமைக்கு நாங்கள் திருப்தி கொள்ள முடியாது. இந்த சரிவிற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருந்துகொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெற்றியை சிதைப்பதற்காக தேர்தல் காலங்களில் உழைத்தமை.

அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளராக ஒருவர் களமிறக்கப்பட்ட நிலையில் அதேகட்சியில் பட்டியல் வேட்பாளராக நிறுத்தப்பட்டவர் இன்னுமொரு கட்சிக்கு ஆதரவு வழங்கிய சம்பவங்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் இருந்து கொண்டே அதனை விமர்சித்தமை தமிழ் மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தினை ஏற்படுத்தியது.

உயரிய நோக்குடன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை சிதைக்காமல், உடைக்காமல் கட்டியெழுப்ப வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் மூன்று கட்சிகள் உள்ளன. நாங்கள் அனைவரும் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற நோக்குடன் தொழிற்படவேண்டும் என தெரிவித்துள்ளார்.