தற்கொலைகள் அதிகரிப்பு! கல்லடிப் பாலத்தில் சிசிரீவி கமெரா பொருத்துமாறு கோரிக்கை

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் சிசிரீவி கமெராக்களை பொருத்துவதற்கான நடவடிக்கையினை புதிய மாநகர சபை உறுப்பினர்கள் பதவியேற்ற முதல் கடமையாக செய்ய வேண்டும் என கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பின்போதே அவர் இந்த கோரிக்கையினை விடுத்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மிக முக்கிய இடமாகவும் கேந்திர நிலையமாகவும் கல்லடிப்பாலம் உள்ளதாகவும் அதன் ஊடாக நடைபெறும் சம்பவங்களை அவதானிப்பதற்காகவும் இதனைச்செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

அண்மைக்காலமாக கல்லடி பாலத்தின் ஊடாக தற்கொலைகள் அதிகரித்துள்ள நிலையில் அதில் சிலர் தற்கொலையா? கொலையா என்று சந்தேகிக்கும் நிலையுள்ளதாகவும் அதன் காரணமாக இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதை சிசிரீவி கமராக்களை பொறுத்துவதன் ஊடாக தடுக்க முடியும் எனவும் அவர் இதன்போது நம்பிக்கை தெரிவித்தார்.

அத்துடன் சட்ட விரோத நடவடிக்கைகளை மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து கல்லடி பாலம் ஊடாக மேற்கொள்வதற்கான சந்தர்ப்பங்களையும் கண்டறிய கூடிய நிலையை இதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகர சபையில் கடமையேற்கும் உறுப்பினர்கள் முதலாவது கையெழுத்தினை இந்த நடவடிக்கைக்கு இடவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.