பூநகரி பிரதேசசபையில் 40 வருடங்களின் பின் ஆட்சியமைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் வெற்றிபெற்ற பூநகரிப்பிரதேச சபையின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை வரவேற்றும் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அருணாசலம் ஐயம்பிள்ளை பூநகரி பிரதேச சபையினுடைய தவிசாளராகவும், பூநகர பிரதேசத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முழங்காவில் தேசிய பாடசாலையின் பதில் அதிபரான சிவகுமாரன் சிறிரஞ்சன் உபதவிசாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பூநகரி பிரதேச சபையில் நாற்பது வருடங்களுக்குப் பின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைக்கவுள்ளதாக கூட்டமைப்பின் கிளிநொச்சி கிளை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தவிசாளர், உபதவிசாளர் உறுப்பினர்கள் ஆகியோரை வரவேற்கும் நிகழ்வு பூநகரி வாடியடிச்சந்தியில் அமைந்துள்ள பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து பூநகரிப்பிரதேச சபையில் இடம்பெற்றுள்ளது.

இதில் பூநகரிப் பிரதேசசபையின் செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள், ஏனைய திணைக்களங்கள் சார் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப்பலர் கலந்து கொண்டிருந்தனர்.