கூட்டமைப்பின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை! சுமந்திரன் பா.உ!

கூடிய ஆசனங்களைப் பெற்ற கட்சிகள் அந்தந்த சபைகளில் ஆட்சி அமைக்க வேண்டும். ஆட்சி அமைக்கும் கட்சிகளே, மேயர், பிரதி மேயர், தவிசாளர், உப தவிசாளர்களைத் தீர்மானிக்க வேண்டும். அதற்கு ஏனைய கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

வடக்கில் 30 சபைகளில் தொங்கு சபைகள் அமைந்துள்ளன. அந்தச் சபைகளில் கூடிய ஆசனங்களைப் பெற்றுக் கொண்ட கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்பதும், அதற்கு ஏனைய கட்சிகள் ஆதரவு வழங்க வேண்டும் என்பதும் சிவில் சமூகத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை.

கூட்டமைப்பு ஆரம்பத்திலிருந்து அந்த நிலைப்பாட்டுக்கு ஆதரவு வழங்கி வருகின்றது.நாம் பெரும்பான்மை பெற்ற சபைகளில் ஆட்சி அமைப்போம். அந்தச் சபைகளின் மேயர், பிரதி மேயர், தவிசாளர், உப தவிசாளர் உள்ளிட்டோரை நாம் தெரிவு செய்வோம். அதற்கு ஏனைய கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இதேபோன்று ஏனைய கட்சிகள் ஆட்சி அமைக்கும் சபைகளில் அந்தக் கட்சிகளே தமது தவிசாளர், உப தவிசாளரை அறிவிக்க முடியும். அதில் நாம் தலையிடமாட்டோம்.

மேலும், கூட்டமைப்பின் சகல கட்சித் தலைவர்கள், மாநகர சபை உறுப்பினர்கள் எல்லோரும் இணைந்து தான் மேயராக ஆனோல்ட்டையும், பிரதி மேயராக ஈசனையும் தெரிவு செய்தார்கள். அதில் எந்தவொரு மாற்றமும் இல்லை என்றார்.