தமிழ் மக்கள் பலவிதமான சிக்கல்களை சந்திக்கின்றனர்!

பாடசாலைக் கல்வியைப் பூர்த்தி செய்த மாணவர்களுள் பலர் தமது அடுத்த கட்ட நகர்வு தொடர்பாக எந்த வித திட்டங்களையும் கொண்டிருப்பவர்களாக இல்லாது வெறுமனே வாழாவிருந்து விடுகின்றார்கள் என வட மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்திற்கான வழிகாட்டி என்னும் நூல் நிகழ்வு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையயில்,

வழிகாட்டிகளாக மூத்த கல்வியியலாளர்களோ அல்லது மூத்த தலைமுறையினரோ இல்லாத நிலையில் அவர்கள் சரியான வழிகாட்டல்கள் இன்றி தமது எதிர்காலத்தைச் சிறப்பாக்கிக் கொள்ள முடியாதவர்களாக இருப்பது பல இடங்களில் உணரப்பட்டுள்ளன.

இளைஞர் யுவதிகள் க.பொ.த சாதாரண தரம் அல்லது க.பொ.த உயர்தரப் பரீட்சைகளை சிறப்புற நிறைவேற்றிய பின்னர் தொடர்ந்து கல்வி கற்க இயலாதவர்கள் உடனடியாகவே வேலை தேடும் படலத்தில் இறங்கி விடுகின்றார்கள்.

ஒவ்வொரு கிழமையும் வெளிவருகின்ற அரச வர்த்தமானி அறிவித்தல்களை அஞ்சல் அலுவலகங்களில் சென்று பார்வையிட்டு அதில் கோரப்படுகின்ற வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்களைத் தாமே சொந்தக் கையெழுத்தில் தயாரித்து விண்ணப்பங்களை அனுப்பி ஏதோ ஒரு வகையில் அரச நியமனங்களை பெற்றுக்கொள்ள முனைகின்றார்கள்.

இப்போது அரச நியமனங்கள் தொடர்பான வெற்றிடங்களுக்கான அறிவித்தல்கள் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டவுடன் புத்தக விற்பனை நிலையங்களும் மற்றும் பல்வேறு நிலையங்களும் மாதிரிப்படிவங்கள், கடித அனுப்பல் உறை முதற்கொண்டு அச்சிட்டு விற்பனை செய்கின்றார்கள்.

எனினும் எமது பிள்ளைகள் வர்த்தமானிகளை வாரத்திற்கு ஒரு தடவை சென்று பார்த்து உரிய வெற்றிடங்களுக்கு விண்ணப்பத்தை அனுப்புகின்ற முறை குறைவாகவே காணப்படுகின்றது.

எமது அலுவலகத்திற்கு ஒவ்வொரு புதன்கிழமையும் பொது மக்கள் சந்திப்பின் போது பலர் வேலை வாய்ப்பு உதவிகள் கேட்டு வருவார்கள்.

அவர்களிடம் நீங்கள் வர்த்தமானி அறிவித்தலை அல்லது புத்தகக் கடைகளில் விற்பனை செய்கின்ற படிவங்களைப் பார்வையிட்டீர்களா என வினவினால் ‘இல்லை’ என்ற பதிலே கூடுதலாக கிடைக்கப்பெறுகின்றது.

இதனால் தற்போது வடமாகாண சபையின் கீழ் வரும் வெற்றிடங்கள் தொடர்பான அறிவித்தல்களை எமது அலுவலகத் தொழில் வங்கியில் பதிவு செய்கின்றோம்.

தொழில்வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்து வருகின்றவர்களின் பெயர்களையும் பதிவு செய்கின்றோம். தகைமை உடையவர்களுக்குத் தனித்தனியாகக் கடித மூலம் அறிவுறுத்தி வருகின்றோம்.

இந்த நிலையில் க.பொ.த சாதாரணதரம், க.பொ.த உயர்தரம் ஆகிய வகுப்புக்களில் அவர்களின் தேர்வுப்பாட ஒழுங்கு வரிசையில் அவர்கள் எவ்வாறான நியமனங்களை அரச துறைத் திணைக்களங்களில் பெற்றுக்கொள்ள முடியும் அல்லது வேறு ஏதாவது மேற்படிப்புக்களை படிக்க விரும்புபவர்களுக்கு எந்தெந்த வகையான கற்கை நெறிகள் மேற்கொள்ளப்பட முடியும்.

எந்தெந்தத் துறைகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டால் எதிர்காலம் சுபீட்சமாக அமையும் அல்லது அமையக்கூடிய வாய்ப்புக்கள் அதிகம் என்கின்ற தகவல்களை எல்லாம் திரட்டி அதனை ஒரு புத்தக வடிவில் வெளியிட்டிருப்பது போற்றப்பட வேண்டியது.

இந்த முயற்சியை மேற்கொண்ட நு.சு.பிரணவா, .யு.கொன்சன் சேவியர் ஆகிய இருவரும் அவர்களோடு இணைந்த குழுக்களும் ஒவ்வொரு திணைக்களங்களாக ஒவ்வொரு கல்வி நிலையங்களாக ஒவ்வொரு அமைச்சுக்களாகத் தேடித்திரிந்து விபரங்களைத் திரட்டியிருக்கின்றார்கள்.

இந் நூலைத் தயாரிப்பதற்கு மிகக் கூடிய மனித வலுவையும் அதிக பொறுமையையும் அவர்கள் பாவித்திருக்க வேண்டும். அவ்வாறு தயாரிக்கப்பட்ட இந்த நூல் ஆர்வமுள்ள அனைத்து மாணவர்களுக்கும் ஒரு சிறந்த வழிகாட்டி நூலாக விளங்கும் என்பதில் ஐயமில்லை.

இன்றைய இளம் சந்ததியினர் தமது பாடசாலை கற்கைகளை மேற்கொண்ட காலத்தில் எதிர் காலம் பற்றிய சிந்தனைகள் குறைவாகக் கொண்டவர்களாகவே இருந்திருப்பர்.

இரண்டாம் நிலைக்கல்வி படித்து முடிந்ததும் தமது தாய் தந்தையர் அல்லது சகோதர சகோதரிகள் அல்லது உறவினர்கள் ஏதாவதொரு வேலையைத் தேடித்தருவார்கள் என்று எதிர்பார்த்திருப்பர். அல்லது பாடசாலை கற்கை நெறிகளை நிறைவு செய்தவுடன் ஏதாவதொரு வெளிநாட்டு பயணத்திற்கு ஏற்பாடு செய்து தருவார்கள் என்ற நம்பிக்கையிலேயே காலத்தைக் கடத்தி வந்திருப்பர்.

ஆனால் இவை எதுவும் நிறைவேறாது போக விரக்தி நிலையை அடைந்திருப்பர். இந்த நிலை மாற்றப்பட வேண்டும். வெளிநாட்டு மோகம் இளைஞர் யுவதிகளுக்கு மட்டுமல்ல வயது வந்தவர்களுக்கும் அதிகமாகக் காணப்படுவதை அவதானிக்கின்றோம்.

ஏதோ ஒரு வகையில் தமது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி விட்டால் அவர்கள் அங்கு சென்று நல்ல நிலையில் வாழ்வார்கள் என்ற எதிர்பார்ப்புடன் பெற்றோர்கள் இருக்கின்றார்கள். பிற்காலத்தில் வசதியாக பண வருவாய்களைப் பெற்றுக் கொடுப்பார்கள் தம் பிள்ளைகள் என்று எதிர்பார்க்கின்றார்கள்.

ஆனால் அவ்வாறு எல்லோருக்கும் அமைவதில்லை. வெளிநாடுகளிலும் பல கம்பெனிகள் இப்போது மூடப்பட்டு வருகின்றன. திரும்பவும் இங்கு வரவேண்டிய நிலை ஆனால் அவ்வாறு வரும் இளைஞர் யுவதிகளுக்குப் போதிய கல்வித்தரம் இருப்பதில்லை.

யுத்த காலத்தில் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வீடு, வாசல், சொத்து, சுகம் அனைத்தையும் இழந்த மக்களிடம் எஞ்சியது அவர்கள் பெற்ற கல்வி அறிவு மட்டுமே. எனவே கல்வி என்பது எக் காலத்திலும் எவராலும் அழிக்க முடியாததும் எங்கு சென்றாலும் உதவக் கூடியதுமானதொன்று.

கல்வி அறிவை வளர்க்க வேண்டும் என்ற சிந்தனைத் துளியை அனைத்து மாணவர்களிடமும் சிறு வயதிலேயே விதைக்க வேண்டும். இவ் அரிய பணியை ஆற்றக் கூடியவர்கள் ஆசிரியர்களே.

ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஏட்டுக் கல்வியை கற்பிப்பதுடன் சேர்த்து அவர்களின் எதிர்காலம் வளம்பெறக் கூடிய வகையில் அவர்களை நெறிப்படுத்த வேண்டும்.

வெறும் பகட்டுவாழ்க்கைகளில் மோகம்கொண்டு கையடக்கத்தொலைபேசி, மோட்டார் சைக்கிள் சுற்றுலா என்று காலத்தைக்கழிக்காது கல்வியில் அதிகூடிய கவனம் செலுத்தி வாழ்க்கையில் முன்னிலை வகிக்கக்கூடிய வகையில் மாணவர்கள் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ள முன் வர வேண்டும்.

தமிழ் மக்கள் இன்று பலவிதமான சிக்கல்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளனர். அவர்களின் ஆதனங்கள் அழிக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட ஒரு சமூகமாக அவர்களுள் பலர் வாழவேண்டிய நிர்ப்பந்தம் இன்றைய அரசியல் கலாச்சாரத்தில் எமது பிள்ளைகள் கல்வி அறிவிலும் பின்தங்குவார்களேயாயின் எமது இனத்தின் வருங்காலம் கேள்விக்கிடமாகிவிடும்.

அதனால் தானோ என்னவோ கற்றறிந்த எமது சமூகம் தாங்கள் உள்நாட்டில் வசித்தாலென்ன வெளிநாடுகளில் வசித்தாலென்ன எமது மாணவர்களின் கல்வி மட்டத்தை உயர்த்துவதற்கு பல வழிகளிலும் உதவி ஒத்தாசைகளைச் செய்தும் ஏற்ற அறிவுறுத்தல்களை வழங்கியும் தேவையான உதவிகளைப் புரிந்தும் அவர்களின் கல்வி நிலையை உயர்த்துவதற்கு அல்லும் பகலும் பாடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

அவ்வாறான அவர்களின் மனோநிலையின் பிரதிபலிப்பே இன்றைய இந்தப் புத்தக வெளியீடு. இதனை தொகுத்து வழங்கிய பெருமக்கள் கல்வி கேள்விகளில் தாம் சிறந்து விளங்குகின்ற போதும் தாம் மட்டும் உயர்ந்தால் போதாது தாம் சார்ந்த சமூகமும் உயர் நிலையை அடைய வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் மிகச் சிரமப்பட்டு நீண்ட கால விரயத்துடன் கூடிய இப் பணியை சிறப்புற நிறைவேற்றியிருக்கின்றார்கள்.

இந்த புத்தகத்தை எத்தனை மாணவர்கள் பயன்படுத்தி சிறந்த நிலைக்கு தம்மை உயர்த்திக் கொள்கின்றார்களோ அந்த அளவிற்கு இவர்களின் பணியும் சிறக்கும்.

உங்கள் காலம் பொன்னானது. உங்களுக்கு உதவுவதற்கு பல வகையான உதவுனர்கள் தயார் நிலையில் இருக்கின்றார்கள்.

எனவே அவர்களின் உதவிகளை மற்றும் வழிகாட்டல்களை சரியாகப் பயன்படுத்தி வாழ்வில் முன்னேறுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.