வடக்கு முதல்வரின் ஆனந்தத்திற்கு காரணமான இளைஞர்கள்!

ஒரு கிராமத்தில் சனசமூக நிலையம் சிறப்புற இயங்குமாயின் அந்த கிராமம் முன்னேற்றகரமான நிலையை அடைவதற்கு எந்த தடையும் இல்லை என்பது பொதுவான கருத்து என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொற்றாவத்தை கலைவாணி சனசமூக நிலைய புதிய கட்டட திறப்பு விழா இன்று காலை இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,

ஒரு கிராமத்தில் இயங்கக்கூடிய சனசமூக நிலையம் சிறப்புற இயங்குமாயின் அந்த கிராமம் முன்னேற்றகரமான நிலையை அடைவதற்கு வேறு எந்தத் தடையும் காரணிகளாக அமையமாட்டா என்பது பொதுவான கருத்து.

இதனால் தான் நாங்கள் வட மாகாண சனசமூக நிலையங்களைப் பலப்படுத்தும் விதத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவியை நாடியுள்ளோம்.

இந்த நிலையில் குறித்த கலைவாணி சனசமூக நிலையம் பல கிளைகளை உள்ளடக்கியதாக உள்ளது. அத்துடன் சுமார் 1400 இற்கும் மேற்பட்ட அங்கத்தவர்களைக் கொண்ட நிலையமாகப் பரிணமித்துள்ளது.

வேறு எந்த சனசமூக நிலையங்களிலும் காணப்படாத ஒரு சிறப்பான நிகழ்வு இந்த நிலையத்தினூடாக முன்னெடுக்கப்படுகின்றமை எனக்கு அறியத்தரப்பட்டது.

கொற்றாவத்தை சனசமூக நிலையத்தின் அங்கத்தவர் ஒருவர் இருதய நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட போது அவருக்கு உடனடியாக இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவேண்டி இருந்தது.

அதற்கு சுமார் 8 இலட்சம் ரூபா வரை நிதி உடனடியாகத் தேவைப்பட்டது. அந்த அங்கத்தவரிடம் அவ்வளவு பணம் இருக்கவில்லை.

அந்த நிலையில் சனசமூக நிலையத்தின் இளைஞர் குழாம் மூலம் செய்திப் பரிமாற்றங்கள் பல நாடுகளுக்கும் பறந்து சென்றன.

இதனையடுத்து ஒரே நாளில் ஏழரை இலட்சம் ரூபா நிதி திரட்டப்பட்டு அந்த அங்கத்தவரின் கைகளில் கொடுக்கப்பட்டதாக அறிந்து, இளைஞர்களின் செயலால் நான் மிகுந்த ஆனந்தம் அடைந்தேன் என கூறியுள்ளார்.