கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் போக்குவரத்து அமைச்சரிடம் விடுத்துள்ள விசேட கோரிக்கை!

மட்டக்களப்பு விமான நிலையத்திற்குள் சிக்கியுள்ள வலையிறவு – சுமைதாங்கியடி பிரதான வீதியை மக்களின் பாவனைக்கு வழங்குவதற்கான நடவடிக்கையினை எடுக்கவேண்டும் என மட்டக்களப்புக்கு வருகைதந்த போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் துரைசிங்கம் மதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற மட்டக்களப்பு விமான நிலையத்தினை திறந்துவைக்கும் நிகழ்விற்கு வருகைத்தந்த அமைச்சரிடமே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

விமானப்படை முகாம் அமைக்கப்பட்டபோது குறித்த பகுதியில் பொதுமக்களின் காணிகளும் வவுணதீவு பிரதேசத்திற்கு செல்லும் பிரதான பாதையான வலையிறவு – சுமைதாங்கியடி பிரதான வீதி என்பன உள்வாங்கப்பட்டதுடன் இதன் காரணமாக பொதுமக்கள் ஐந்து கிலோமீற்றர் வீதியை சுற்றியே வலையிறவு பாலம் ஊடாக வவுணதீவினை சென்றடையமுடியும்.

ஆனால் வலையிறவு – சுமைதாங்கியடி பிரதான வீதி, மக்கள் போக்குவரத்திற்கு திறந்துவிடப்படுமானால் 500 மீற்றர் மட்டுமே பயணிக்கவேண்டிய நிலையேற்படும் என்பதுடன் இலகுவாக தமது பிரதேசத்திலிருந்து வந்துசெல்ல முடியும்.

குறித்த வீதி உள்வாங்கப்பட்டுள்ளதன் காரணமாக வைத்தியசாலைக்கு செல்லும் நோயளர்களும் வியாபாரிகள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் பல்வேறு கஸ்ட்டங்களை எதிர்நோக்குவதாகவும் இதன்போது உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.

இதற்கு பதிலளித்த போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, குறித்த வீதி தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவில் கலந்துரையாடி தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி தனக்கு அனுப்பிவைத்தால் அது தொடர்பில் நடவடிக்கையெடுப்பதாக தெரிவித்தார்.