இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தமிழ் பேசும் மக்களுக்கானது: துரைராசசிங்கம்

சிங்கள மக்கள் மத்தியில் இருக்கின்ற தப்பபிப்பிராயங்கள் எல்லாம் நீக்கப்பட்டால் மட்டும் தான் நீடித்து நிலைத்து நிற்கும் அரசியல் தீர்வைப் பெற முடியும் என கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற தந்தை செல்வாவின் 120வது பிறந்த தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

வெறுமனே மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடோ, மக்கள் தீர்ப்போடோ அரசியலமைப்புச் சட்டம் வருவதால் மட்டும் அது நீடித்து நிலைத்து நிற்க மாட்டாது.

விடுதலையை வேண்டுகின்ற இந்த நாட்டில் ஒரு சிறுபான்மை மக்களுடைய அரசியல் கட்சி என்ற வகையில் 70 ஆண்டுகள் தொடர்ச்சியாக இருக்கின்ற கட்சி என்றால் அது தமிழரசுக் கட்சிதான்.

சந்தர்ப்பத்திற்கு ஏற்ற விதத்தில் பெயரை மாற்றிக் கொள்ள வேண்டி இருந்தாலும் தமிழரசுக் கட்சி என்ற அத்திவாரத்தில் தான் அவை இருந்தன.

எமது கட்சியின் அரசியல் தமிழர்கள் என்ற வட்டத்திற்குள் இருந்து தோன்றவில்லை. மனித உரிமைகள், அல்லது பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளை வென்றெடுத்தல் என்ற அடிப்படையில் தான் எமது அரசியல் ஆரம்பமாகியது.

சிங்கள மக்களுக்கு அநீதி நடந்தாலும், முஸ்லிம் மக்களுக்கு அநீதி நடந்தாலும் முதற் குரலாக தமிழரசுக் கட்சி அல்லது தமிழரசுக் கட்சியின் தலைவர்களின் குரல்கள் தான் வந்ததை நாங்கள் காண்கின்றோம்.

தந்தை செல்வாவிடம் இருந்து நாங்கள் பெற்றுக் கொள்வது என்னவென்றால் நாங்கள் உரிமை என்று சொல்லுகின்ற விடயம் மனித உரிமை என்கின்ற பெரிய வட்டத்திற்குள்ளே பார்க்க வேண்டுமே தவிர சிறிய அளிவிலே வைத்துக் கொண்டு அதனைப் பார்க்கக் கூடாது.

அந்தப் பண்போடு நாங்கள் எங்களுடைய தீர்மானங்களை எடுக்க வேண்டும். இது தமிழ் பேசும் மக்களுக்கான கட்சி.

இந்த நாட்டில் மக்கள் உரிமையோடு வாழ வேண்டும் என்றால் அதற்கொரு கட்டமைப்பு இருக்க வேண்டும். அது சமஷ்டிக் கட்டமைப்பாக இருக்க வேண்டும்.

சமஷ்டிக் கட்டமைப்பிலே சிறுபான்மை மக்கள் தமிழர்கள், முஸ்லிம்கள் என்று இருக்கின்றார்கள். அந்தவிதத்தில் வடக்குக்கு ஒரு சபை, கிழக்கிற்கு இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட சபை என்று மிக அழுத்தம், திருத்தமாகத் தந்தை செல்வா கூறிய கொள்கைதான் தமிழரசுக் கட்சியின் கொள்கை.

கெட்டித்தன அரசியலை விட மனிதாபிமான அரசியலுக்குள்ளே தந்தை செல்வா நின்றார். கட்சிகளுக்கு புதுவரவு வருகின்ற போது, கட்சிக்குத் தேவையானவர் என்று தலைமை எண்ணுகின்ற போது அதனை உடனடியாக ஏற்றுக் கொள்வதற்கு எங்களுடன் ஏற்கனவே இருப்பவர்கள் தயாராக இருக்கவில்லை என்பது இன்றைக்கு மட்டுமல்ல அது தொடர்ச்சியாக வந்திருக்கின்றது.

தந்தை செல்வாவின் கருத்துக்களைக் கடைப்பிடிக்கின்றோம் என்றால். கட்சித் தீர்மானங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை நாங்கள் தந்தை செல்வாவின் நினைவு நாளில் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மற்றவர்களைத் தாக்காத அரசியலைத் தான் கடைப்பிடிக்க வேண்டும் என்ற சொன்னார். தந்தை செல்வா எந்தக் காலத்திலும் சாத்வீகத்தைத் தவிர்ந்த ஏனைய பாதையை அவர் அங்கீகரித்தது கிடையாது.

நாங்கள் மற்றவர்களை தூற்ற வேண்டிய அவசியமில்லை. கருத்தைச் சொல்பவனை நாங்கள் புறந்தள்ளக் கூடாது. அந்தக் கருத்தும் கருத்தும் மோதிக் கொள்கின்ற போது பிழைகள் அகற்றப்பட்டு, சரியானது வெளிப்படும். அதுதான் நீடித்து நிலைத்து நிற்கின்ற செயற்பாடு.

மற்றவர்களைச் சேர்த்துக் கொண்டுதான் உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்க வேண்டி இருக்கின்றது அவ்வாறு இருக்கும் போது எங்களுக்குள் இருப்பவர்களுக்குள்ளேயே தலைவர்களுக்கு போட்டி வருகின்றது.

அதனைச் சமாளித்தாலும் பிறகு வாக்கெடுப்பின் போது அவர்கள் வெளிவேறாக நடந்துகொள்கின்றார்கள். தந்தை செல்வாவின் வரலாற்றை அறிந்திருக்கின்றோம்.

அவரின் கட்சியில் இருக்கின்றோம் என்பது மட்டும் எங்களுடைய முத்திரையல்ல. தமிழீம் என்கின்ற பிரகடணம் சாத்வீக வழியில் அடைய வேண்டும் என்பதுதான் தந்தை செல்வாவின் ஆத்மார்த்தமான கருத்து.

இதனை வைத்து நாங்கள் போராட்டத்தைக் கொச்சைப் படுத்துகின்றோம் என்று யாரும் பொருள் கோடல் செய்துகொள்ளக் கூடாது.

ஒரு அரசியல் கட்சியின் வெற்றி என்பது ஒரு செய்தியை எதிரிலுள்ளவர்களும் நியாயம் என்று கருதி அவர்களும் அதை எடுத்துக் கொண்டு செல்வதிலே தான் இருக்கும். இவ்வாறான சந்தர்ப்பம் தான் நீடித்து நிலைத்து நிற்கின்ற விடயமாக இருக்கும்.

அந்த விடயத்தைச் சொல்லுகின்ற வகையில் தான் தந்தை செல்வா செயற்பட்டு வந்தார்கள். அதனை நாங்கள் உள்வாங்கிக் கொண்டு அதற்குள்ளே நாங்கள் வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.