தமது கொள்கைகளில் இருந்து தமிழரசுக் கட்சி விலகாமலே பயணிப்பதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற தந்தை செல்வாவின் 120 ஆவது பிறந்தநாள் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘தமிழ் இனத்தின் விடுதலைக்காக சாத்வீக ரீதியாகவும் ஆயுதவழியிலும் போராடிக்கொண்டிருக்கிறது தமிழ் இனம் சாத்வீக ரீதியான எமது போராட்டங்களையும் சிங்கள தேசம் ஏற்றுக்கொள்ளவில்லை.
எனினும் அதனைப் புரிந்து கொள்ளாமல் மாறாக அதற்கு எதிராக அடக்கு முறைகளையே கட்டவிழ்த்து விட்டது.
அதனால் உருவான ஆயுத போராட்டம் இறுதியில் முள்ளிவாய்க்காலுடன் மௌனித்தமை யாவரும் அறிந்ததே. இந்த போராட்டங்களிலே பல இழப்புகளையும் இன்னல்களையும் தமிழினம் அனுபவித்ததுடன் இன்றும் அனுபவித்து கொண்டே இருக்கிறது.
யுத்தம் முடிந்து 10 ஆண்டுகள் கடந்த நிலையிலும் கூட காணாமல் போனோர் ஒருபுறம் மறுபுறம் காணிகளை விடுவிக்க கோரியும் தெரு ஓரங்களிலே சாத்வீகமாக போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
இன்று தங்களது அரசியல் செல்வாக்கிற்காகப் பிரிந்து நிற்கின்ற தமிழ் கட்சிகள் எமது மக்களின் விடிவிற்காக தமிழன் தன்னை தானே ஆளக்கூடிய அந்த நின்மதியான வாழ்விற்காக கட்சி பேதங்களை மறந்து ஒன்றிணைய வேண்டும்.
தந்தை செல்வாவினுடைய கனவு நிறைவேறுகின்ற இன்றைய சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.