தமிழ் மண்ணுக்கு பெருமை சேர்ந்த மாணவர்களுக்கு யோகேஸ்வரன் எம்.பி வாழ்த்து!

2017ஆம் ஆண்டு முடிவடைந்த க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் மூலம் தமிழ் சமூகத்துக்கு பெருமை சேர்த்த கல்விச் செல்வங்களை வாழ்த்துவதில் பெருமிதம் கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தற்போது வெளியான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் தொடர்பாக வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே மேற்சொன்னவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் தற்போது வெளியான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் படி அகில இலங்கை ரீதியில் ஏழாம் இடத்தையும், தமிழ் மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தையும் பெற்று தமிழ் சமூகத்திற்கு பெருமை சேர்த்து தந்த யாழ்ப்பாணம் வேம்படி உயர் மகளீர் கல்லூரி மாணவி சுரேஷ்குமார் மிருதிக்கு தமிழ் சமூகம் சார்பாக எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமிதமடைகின்றேன்.

இந்த புதிய பாடத்திட்டத்திற்கமைய சாதாரண தரப் பரீட்சையில் 10,000 மாணவர்கள் ஒன்பது ஏ சித்திகளைப் பெற்றிருப்பது மிகவும் சந்தோசத்தை தருகின்றது.

அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன் முறையாக தமிழ் பாடசாலை ஒன்றில் அதிக சித்திகளைப் பெற்று தமிழ் சமூகத்திற்கு பெருமை சேர்த்த வின்சன்ட் மகளீர் உயர்தர பாடசாலை மாணவர்கள் 42 பேருக்கும், மற்றும் ஏனைய சித்திகளைப் பெற்ற மாணவர்களையும் பாராட்டுகின்றேன்.

அத்தோடு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள நான்கு தமிழ் கல்வி வலயங்களில் திறமையான சித்திகளைப் பெற்ற மாணவர்களை பாராட்டுவதுடன், இவர்களை கற்பித்த ஆசிரியர்களையும் இந்த சந்தர்ப்பத்தில் பாராட்டுகின்றேன் என தெரிவித்துள்ளார்.