தற்போது இருக்கின்ற தலைவர் சம்பந்தனும் இதையே விரும்புகின்றார்: யோகேஸ்வரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் இருக்கின்றவர்களே தமிழரசுக் கட்சியை தாக்குகின்றார்கள். அந்த அடியை வாங்கிக் கொண்டு தந்தை செல்வா காட்டிய அகிம்சை வழியில் இருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் நாம் இருக்கின்றோம் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் உள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற தந்தை செல்வாவின் 120ஆவது பிறந்த தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் கூறுகையில்,

தந்தை செல்வா எமது மக்களுக்காக ஆற்றியது மிகப் பெரிய செயற்பாடுகள். அவர் முஸ்லிம் மக்களுக்கு சரிசமமான அந்தஸ்தை வழங்கி தமிழ் பேசும் மக்கள் என்ற வகையில் தான் அவரின் செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தார்.

அப்போது முஸ்லிம்களுக்கென்று தனித்துவமான கட்சிகள் எதுவும் இருக்கவில்லை. அவர்களும் தமிழரசுக் கட்சியில் தான் இருந்தார்கள். ஆனால் தற்போது முஸ்லிம்கள் மத்தியில் அதிகமாக கட்சிகள் உருவாகிக் கொண்டு வருகின்றது.

எனவே தமிழ் பேசும் மக்களுக்குரிய கட்சியாக இந்த தமிழரசுக் கட்சி இருந்தாலும் கூட இன்று முஸ்லிம்களே தமிழரசுக் கட்சியை விமர்சிப்பதைக் காணக்கூடிய தன்மை இருந்துகொண்டிருக்கின்றது.

தற்போது தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்திற்கு முஸ்லிம்கள் வாக்களிப்பதில்லை. ஆனால் தந்தை செல்வா அன்று தமிழ் பேசும் மக்கள் என்றுதான் அவர்களுக்காக குரல் கொடுத்தார்.

தற்போது இருக்கின்ற எமது தலைவர் சம்பந்தன் ஐயா அவர்களும், பெறுகின்ற தீர்வு தமிழ் பேசும் மக்களுக்கு உகந்ததாக இருக்க வேண்டும் என்றுதான் விரும்புகின்றார்.

எனவே எமது தலைமைகள் தமிழ் பேசும் மக்கள் எனும் ரீதியில் முஸ்லிம் மக்களை நேசிக்கின்ற போது தமிழ்த் தரப்புக்கு முஸ்லிம்களோடு இணைந்த ஒரு நியாயமான தீர்வு வருவதற்கு தந்தை செல்வா எதிர்பார்த்த வடக்கு கிழக்கு இணைந்த ஒரு நிரந்தர அரசியல் தீர்வு வருவதற்கு முஸ்லிம் மக்களும் ஒத்துழைக்க வேண்டிய அவசியம் இருக்கின்றது.

தந்தை செல்வா நேசித்த முஸ்லிம் மக்கள் தந்தை செல்வாவை நேசிப்பவர்களாக இருந்தால் அவர்கள் வடக்கு கிழக்கு இணைப்புக்கு உடன்பட்டு வர வேண்டும்.

நாங்கள் எமது தந்தை செல்வாவின் வழியில் எமது இலங்கைத் தமிழரசுக் கட்சியை பாதுகாத்துச் செல்வோம்.

எமது மக்களுக்காக நீண்ட காலம் போராடிய கட்சி தமிழரசுக் கட்சிதான். அது எப்போதும் தமிழினத்தோடு தான் இருக்கும். ஒருபோதும் சோர்ந்து போகாது.

எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் இலங்கை தமிழரசுக் கட்சியை வீழ்ச்சியுறச் செய்வதற்கோ, அதன் சின்னத்தை மாற்றியமைப்பதற்கோ ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்று தெரிவித்தார்.