தொழிலாளர் தினத்தை ஒத்தி வைப்பதை ஏற்கமுடியாது: அரியநேத்திரன்!

உலகத் தொழிலாளர் தினத்தில் அனைத்துலக தொழிலாளர்களையும் அவர்களின் உழைப்பையும், உரிமையையும் வேண்டி குரல் கொடுக்கும் அதே நாளில் நினுவுகூர்ந்து விழா எடுப்பதே தொழிலாளர்களுக்கு பெருமை என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இம்முறை வெசாக் தினத்தை முன்னிட்டு அரசாங்கத்தால் மே தினம் எதிர்வரும் 7ஆம் திகதி பிற்போடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

வெசாக் தினம் ஒரு மதம் சம்பந்தமான வருடாந்த விழா. அதை அந்த மதத்தில் உள்ளவர்கள் கொண்டாடுவது அவர்களின் கடமை, விருப்பம்.

அதற்காக உலகத்தால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துலக தொழிலாளர் தினத்தை மே மாதம் 1ஆம் திகதி நடத்தாமல் பிற்போடுவது என்பது தொழிலாளர்களை அவமதிக்கும் செயலாகவே பார்க்க முடிகிறது.

ஒவ்வொரு தினங்களும் அந்தந்த நாளில்தான் அனுஷ்டிக்க வேண்டுமே தவிர, அதை பிற்போடுவதை ஏற்கமுடியாது. வெசாக் இலங்கையில் பௌத்த மதத்தவர்களுக்கு முக்கியமான நாள் என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம்.

ஒரே நாளில் இரண்டு நிகழ்வுகள் இடம்பெறுவதில் எந்த தப்பும் இல்லை. மே தினம் செய்பவர்கள் அதனை செய்ய வேண்டும்.

வெசாக் அனுஷ்டிப்பவர்கள் அதனை செய்யலாம். ஒரு மத வழிபாட்டு விழாவுக்காக தொழிலாளர் தினத்தை ஒத்தி வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

வெசாக் விழா 24 மணித்தியாலங்களும் செய்யக்கூடிய நிகழ்வு. ஆனால் தொழிலாளர் தினம் ஓரிரு மணித்தியாலங்கள் மட்டுமே செய்யும் நிகழ்வு இரு நிழ்வுகளும் ஒரே நாளில் இடம்பெறுவதில் என்ன தவறு உள்ளது.

இதனை புரிந்து கொண்டு வெசாக் தினத்திற்கு அதன் சம்பிரதாயம் பாரம்பரியங்களுக்கு இடையூறு ஏற்படா வண்ணம் செய்வதே நல்லது என தெரிவித்துள்ளார்.