நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் முக்கிய முடிவு: மாவை சேனாதிராஜா

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எவ்வாறு வாக்களிப்பது என்பது குறித்து கட்சியின் நாடாளுமன்ற குழுவே தீர்மானிக்கும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்று ஊடகங்களுக்குத் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “ எதிர்வரும் ஏப்ரல் நான்காம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கொண்டுவரப்படவிருக்கும் நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் எமது நிலைப்பாட்டை எமது கட்சியின் மன்றக் குழுவில் தீர்மானிக்கப்படும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடப்பட்டு முடிவெடுக்கப்படும். இந்த விடயம் தொடர்பில் முடிவை ஏப்ரல் 2 ஆம், 3 ஆம் திகதிகளில் அறிவிப்போம்.

அதற்கு முன்னர் நாம் ஜனாதிபதியுடனும் பிரதமருடனும் கலந்துரையாடலொன்றை மேற்கொள்ளவுள்ளோம். எங்களுடைய மக்கள் எமக்கு ஆணை தந்துள்ளார்கள் அதன்படியே நாம் தீர்மானங்களை எடுப்போம்” என்று தெரிவித்தார்.