வடக்கு முதல்வருக்கும் இராணுவ தளபதிக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை!

இராணுவ தளபதி லெப்டினட் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க மற்றும் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கு இடையில் நேற்று விசேட பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள முதலமைச்சரின் செயலகத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

இராணுவ தளபதி தனது யாழ். விஜயத்தின் ஓர் அங்கமாக முதலமைச்சருடன் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுள்ளார்.

பாதுகாப்பு படையினர் வசம் இருக்கும் பொது மக்களின் காணிகளை விடுவிப்பது, படையினரின் உதவியின் கீழ் வடக்கு பாடசாலை மாணவர்களின் தலைமைத்துவ திறமைகளை முன்னேற்றுவது, வடக்கு மாகாணத்தின் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பாதுகாப்பு படையினர் வசம் இருக்கும் காணிகளில் ஒரு பகுதியை அதன் உரிமையாளர்களுக்கு வழங்க உள்ளதாக இராணுவ தளபதி இதன் போது கூறியுள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையில் இராணுவ உயர் அதிகாரிகள், முதலமைச்சரின் செயலக அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.