பலத்த போட்டிக்கு மத்தியில் நாவிதன்வெளி பிரதேசசபையை கைப்பற்றியது தமிழரசுக்கட்சி!

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் நாவிதன்வெளி பிரதேச சபையின் ஆட்சியதிகாரத்தினை இலங்கை தமிழரசுக்கட்சி எட்டு உறுப்பினர்களை கொண்டு தன்வசமாக்கிக் கொண்டது.

நாவிதன்வெளி பிரதேசசபையின் கன்னி அமர்வு இன்று காலை டிநாவிதன்வெளி பிரதேசசபையின் கேட்போர் கூடத்தில் பிரதேசசபையின் செயலாளர் M.ராமக்குட்டி தலைமையில் நடைபெற்றபோது.

இச்சபையின் தவிசாளராக தவராசா கலையரசன் தெரிவு செய்யப்பட்டார்.

இவர் முன்னர் நாவிதன்வெளி பிரதேசபையின் உப தவிசாளராகவும், தவிசாளராகவும், பின்னர் கிழக்கு மாகாணசபையின் உறுப்பினராகவும் இருந்து மக்கள் பணி செய்தவர்.

இச்சபையில் தமிழரசுக்கட்சி சார்பாக தெரிவு செய்யப்பட்ட 5 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்பாக தெரிவு செய்யப்பட்ட இரண்டு உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா முஸ்லிங் காங்கிரசில் இருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரு உறுப்பினருமாக இணைந்து மொத்தமாக எட்டு உறுப்பினர்களைக்கொண்டு இச்சபை அமைக்கப்பட்டுள்ளது.

திறந்தவெளி வாக்கெடுப்பின் மூலமே தவிசாளர், பிரதித் தவிசாளர்களது தெரிவுகள் நடைபெற்றது. அதனடிப்படையில் தவிசாளராக த.கலையரசனும், பிரதி தவிசாளராக ஏ.கே.சமட் ஆகிய இருவரும் தெரிவு செய்யப்பட்டார்கள்.

இதன்போது நல்லாட்சிக்கான தேசிய முன்னணியில் இருந்து தெரிவான மொஹமட் இஸ்மாயில் ஜெகான் நடுநிலையாக இருந்து செயற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்விற்கு முன்னாள் கிழக்கு மாகாணசபை விவசாய அமைச்சரும், தமிழரசுக்கட்சியின் செயலாளர் நாயகமுமாகிய கி.துரைராஜசிங்கம், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மு.இராஜேஸ்வரன், கிழக்கு மாகாண உள்ளூராட்சி தேர்தல் ஆணையாளர் சலீம், மூன்று மாவட்டங்களிலும் இருந்து வருகை தந்த உள்ளூராட்சி ஆணையாளர்கள், உள்ளூராட்சி மன்றத்தின் உறுப்பினர்கள் சவளக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்

.