பேரினவாதக் கட்சிகள் ஆட்சியமைக்கக்கூடாது என்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஆதரவு வழங்கத் தயார் என்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.
இது தொடர்பில் அந்தக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் வி.மணிவண்ணனுடன் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோ அமைப்பினர் நேரடியாகப் பேச்சு நடத்தியுள்ளனர்.
மேலும், கோண்டாவிலில் இடம்பெற்ற நிகழ்வில் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானமும் வரவேற்று உரையாற்றியுள்ளார்.
ரெலோ அமைப்பின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் வி.மணிவண்ணன், ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்பின் தலைவர் க.சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோருடன் நேற்றுமுன்தினம் சந்திப்பு நடத்தியுள்ளார்.
வடக்கு, கிழக்கில் பேரினவாதக் கட்சிகள் ஆட்சியமைக்கின்ற நிலைமை ஏற்பட்டுள்ளதால், அந்த இடங்களில் தமிழ்த் தேசியக் கொள்கையுடைய கட்சிகள் ஆட்சியமைக்கவேண்டும் என்ற கட்டாய நிலைமை காணப்படுவதால் இந்தப் பேச்சு நடைபெற்றதாக சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.
இதேவேளை, சுரேஷ் பிரேமச்சந்திரன், சகல சபைகளிலும் நடுநிலைமை வகிப்பது என்றே தமது கட்சி தீர்மானம் எடுத்துள்ளதாகவும், சிங்களக் கட்சிகள் ஆட்சியமைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டதாக சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக நல்லூர் பிரதேச சபைக்குப் போட்டியிட்டு வெற்றிபெற்ற பிரதேச சபை உறுப்பினர் கு.மதுசுதனுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வு கோண்டாவிலில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், “புதிய உள்ளூராட்சி சபைத் தேர்தல் முறை காரணமாக நாடு முழுவதிலும் உள்ள உள்ளூராட்சி சபைகளில் உறுதியான நிர்வாகத்தை ஏற்படுத்தமுடியாத சூழ்நிலை காணப்படுகின்றது.
அவ்வாறான நிலையில் வடக்கில் உள்ளூராட்சி சபைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிர்வாகத்தைக் கைப்பற்றி வருகின்றது.
கூட்டமைப்பினருக்கு எதிர்பாராத ஆதரவுகளே கிடைக்கப்பெற்று வருகின்றன. நாம் எவருடனும் ஒன்றுசேரவில்லை.
வவுனியா வடக்கு பிரதேச சபையில் தென்னிலங்கை கட்சிகளின் அதிகாரம் வரக்கூடாது என்பதற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் கூட்டமைப்புக்கு ஆதரவு தருவதாகக் கூறியிருக்கும் கருத்தை நான் வரவேற்கின்றேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.