தமிழ் பேசும் மக்கள் 100 வீதம் வாழும் பிரதேசங்களில் தமிழ் மொழியை பேச முடியாதவர்கள் சேவையில்: சுமந்திரன்!

குளியாப்பிட்டி பகுதியில் தென்னந்தோட்டங்களில் தேங்காய் பறித்த நபர்கள் கூட வடக்கில் அலுவலக உதவியாளர்களாகவும் பாதுகாப்பு அதிகாரிகளாகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தமிழ் பேசும் மக்கள் 100 வீதம் வாழும் பிரதேசங்களில் தமிழ் மொழியை பேச முடியாதவர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் கச்சேரியில் பணியாற்றும் ஆறு வாகன சாரதிகள் காலியில் இருந்து வந்தவர்கள். ஏன் காலியை சேர்ந்தவர்கள் சாரதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்?

குளியாப்பிட்டியில் தென்னந் தோட்டங்களில் தேங்காய் பறித்தவர்கள் வடக்கில், அலுவலக ஊழியர்களாகவும் பாதுகாப்பு அதிகாரிகளாகவும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தேங்காய் பறிப்பவர்கள் இல்லாத காரணத்தினால், தேங்காய் விலையும் அதிகரித்துள்ளது.

அதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் தெற்கில் இருந்து மீனவர்கள் அழைத்து வரப்பட்டு குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. முல்லைத்தீவில் காணிகள் இல்லாத மக்கள் இருக்கின்றனர்.

தெற்கில் இருந்து அழைத்து வந்து சிங்களவர்கள் குடியேற்றப்பட்டதே ஆரம்ப காலத்தில் பிரச்சினைகளுக்கு காரணமாக அமைந்தன. தற்போதும் அதனை தொடரக் கூடாது எனவும் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியால் குறித்த நியமனங்கள் வழங்கப்பட்டு நீண்ட நாட்கள் கடந்த நிலையில் கூட்டமைப்பு இதுவரை இது பற்றி எந்த தகவலையும் வெளிப்படுத்தவில்லை.

இவ்வாறிருக்க தற்போது கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாக எம்.ஏ. சுமந்திரன் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் இது பற்றி கருத்து வெளியிட்டுள்ளமை குறித்து பலராலும் பேசப்படுகின்றது.