மீட்கப்பட்ட மனித எலும்பு எச்சங்களுக்கும் இராணுவத்திற்கும் தொடர்பு: சாள்ஸ்

மன்னார் நகரில் காணப்பட்ட ‘லங்கா சதொச’ விற்பனை நிலையம் உடைக்கப்பட்டு மண் அகழ்வு இடம் பெற்ற போது குறித்த பகுதியில் மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த மனித எலும்புக்கூடுகளுக்கும் இராணுவத்திற்கும் தொடர்புகள் இருப்பதாக தாம் சந்தேகிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

குறித்த பகுதியில் மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டமை என்பது மக்களினால் தாங்களாகவே அடக்கம் செய்யப்பட்ட இடமாக நான் கருதவில்லை.

குறித்த இடத்திற்கு 50 மீற்றர் தூரத்தில் இராணுவத்தினுடைய நிரந்தர முகாம் மற்றும் இராணுவ உலவுத்துறையினரின் கண்காணிப்புக்கள் நீண்ட காலமாக காணப்பட்டுள்ளது.

இலங்கையில் யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் குறித்த பிரதேசம் இராணுவத்தின் நேரடி கட்டுப்பாட்டில் காணப்பட்டது.

குறித்த பிரதேசத்தில் மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டமை சாதாரண விடயம் இல்லை.

இதே போன்று திருக்கேதீஸ்வரம் மாந்தை பகுதியில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளுகின்ற போது மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டது.

இவை யுத்தம் இடம் பெற்றுக்கொண்டிருக்கின்ற போது குறிப்பாக அரச படைகளினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகத்தான் நான் பார்க்கின்றேன்.

குறித்த எலும்புக்கூடுகள் இராணுவ முகாமுக்கு அருகாமையில் மீட்கப்பட்டுள்ளமையினால் இதற்கும் இலங்கை இராணுவத்திற்கும் தொடர்புகள் இருப்பதாக நான் சந்தேகிக்கின்றேன்.

இவ்விடையம் தொடர்பில் உண்மையான நிலைப்பாட்டை நீதிமன்றம் ஊடாக உண்மையில் என்ன நடந்தது என்பது தொடர்பில் இந்த நாட்டிற்கு இலங்கையில் இருக்கின்ற சட்டம் வெளிப்படுத்துமா? என்பதும் எமக்கு சந்தேகமாக உள்ளது.

இது தொடர்பில் பூரண விசாரனையை நீதிமன்றம் நடத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.