தீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்! – சம்பந்தன் எச்சரிக்கை

புதிய அரசமைப்பை உருவாக்கும் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு விரைவாக ஒரு தீர்வை எட்டவேண்டும். இந்தக் கருமங்களை அரசு செய்யத் தவறும் பட்சத்தில் எம் மத்தியில் உள்ள தீவிர செயற்பாட்டாளர்களுக்கு அது ஒரு உந்து சக்தியாக அமைவதோடு நாமும் மிகக் கடுமையான நிலைப்பாட்டை எடுக்கவேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படுவோம் என ஐரோப்பிய ஒன்றியக் குழுவினரிடம் எடுத்துரைத்தார் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்.

ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 6 பேர், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை, நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று சந்தித்துக் கலந்துரையாடினர்.

இந்தச் சந்திப்புத் தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஊடகப் பிரிவினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

முன்னைய அரசு ஜனநாயகப் பண்புகளிலிருந்து விலகியதன் காரணமாவே தற்போதைய அரசு பதவிக்கு வந்துள்ளது. இந்த அரசின் சிந்தனையும் நடவடிக்கைகளும் முன்னைய அரசின் நடவடிக்கைகளோடு ஒப்பிடுகையில் சாதகமாக இருந்தாலும், கருமங்கள் மிக மந்தகதியிலேயே இடம்பெறுகின்றன.

இந்த அரசு இனங்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தி சமூகங்களுக்கிடையில் சுமூக நிலைமையைக் கொண்டுவருவதற்கு இணக்கப்பாட்டைக் கொண்டிருப்பதாகவும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

அதிகாரப் பகிர்வு தொடர்பில் விளக்கமளித்த சம்பந்தன், குறிப்பிட்ட பிரதேசங்களில் பல நூற்றாண்டுகளாக வாழும் மக்களின் சுயமரியாதை, மதிப்பு மற்றும் இறைமை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒருமித்த பிரிபடாத, பிரிக்க முடியாத நாட்டுக்குள் ஒரு தீர்வையே நாம் வேண்டி நிற்கிறோம்.

இதனைப் பூர்த்தி செய்வதற்கு புதிய அரசமைப்பை உருவாக்கும் கருமங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு விரைவான ஒரு தீர்வை எட்டவேண்டும் என்றும் கூறினார்.

புதிய அரசமைப்பில் மக்கள் தமது கருமங்களை தாமே முன்னெடுக்கக் கூடிய வகையில், அதிகாரங்கள் பகிரப்படுவதினையும், அத்தகைய அதிகாரங்கள் மத்திய அரசினால் மீளப்பெறமுடியாத வகையிலும், மத்திய அரசு அந்தஅதிகாரங்களில் தலையிட முடியாத வகையிலுமான ஒரு கட்டமைப்பையே எதிர்பார்க்கிறோம் என்றும் தெரிவித்த இரா. சம்பந்தன், இந்த விடயங்கள் தொடர்பில் நாங்கள் மிகவும் நியாயமான வகையிலேயே செயற்படுகின்றோம் என்றும் கூறினார்.

ஆனால், இந்தக் கருமங்களை அரசு செய்யத் தவறும் பட்சத்தில் எம் மத்தியில் உள்ள தீவிர செயற்பாட்டாளர்களுக்கு அது ஒரு உந்துசக்தியாக அமைவதோடு நாமும் மிகக் கடுமையான ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படுவோம் எனவும் வலியுறுத்தினார்.

உறுப்பினர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளித்த இரா.சம்பந்தன், தமிழ் மக்கள் இந்த நாட்டில் இரண்டாந்தர மக்கள் குழுவாக பார்க்கப்படுவதன் நிமித்தம் அவர்கள் பாதிப்புக்குள்ளாகி வேதனையடைந்தவர்களாக மட்டுமல்லாது, நிந்திக்கப்பட்டவர்களாகவும் ஒடுக்கப்பட்டவர்களாகவும் காணப்படுவதாகவும் சம்பந்தன் தெரிவித்தார்.

மேலும், அரசியல் கோரிக்கைகளை முன்வைத்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தமிழ் மக்கள் மீது வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்ட சந்தர்ப்பங்களையும் சம்பந்தன் எடுத்துரைத்தார்.

இவற்றினால் இந்த நாட்டில் தொடர்ந்தும் வாழ முடியாது என்ற நிலைப்பாட்டில் அநேக தமிழ் மக்கள் நாட்டை விட்டுவெளியேறி உலகின் பல பாகங்களிலும் வாழ்ந்து வருகின்றனர் எனவும், இந்த நிலைமை தொடர்ந்தும் நீடிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

சர்வதேச சமூகத்திற்கு இலங்கை அரசு வழங்கிய வாக்குறுதிகளை மீண்டும் வலியுறுத்திய இரா.சம்பந்தன் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதில் காட்டப்படுகின்ற நீண்ட தேவையற்ற இழுத்தடிப்புக்கள் தொடர்பில் தமது அதிருப்தியைத் தெரிவித்த இரா.சம்பந்தன், இந்தச் சட்டமானது நீக்கப்படுவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமை குறித்து உறுப்பினர்களைத் தெளிவுபடுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், பல கைதிகள் எந்தவொரு விசாரணையுமின்றி பல ஆண்டுகளாக சிறைகளில இருக்கிறார்கள் என்றும், அவர்கள் அத்தனை பேரும் மேலும் தாமதங்களின்றி விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

நிலைமாற்றுகால நீதிப் பொறிமுறைகள், படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணி விடுவிப்பு போன்ற விடயங்களிலும் அரசின் செயற்பாடு மிக மந்தகதியிலேயே இடம்பெறுவதையும் சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.

அரசு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றுவதனை சர்வதேச சமூகம் உறுதி செய்யவேண்டும் என்பதை வலியுறுத்திய இரா.சம்பந்தன், இலங்கை அரசுக்கான சர்வதேச சமூகத்தின் ஆதரவானது நிபந்தனைக்குட்பட்டது என்பதை சர்வதேச சமூகம் இலங்கை அரசுக்கு ஞாபகப்படுத்த வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

இலங்கை அரசானது தனது கடமையைச் செய்ய வேண்டும் எனவும், அதிலிருந்து விலக முடியாது எனவும் சம்பந்தன் தெரிவித்தார். மேலும், சர்வதேச சமூகமானது தமிழ் மக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பைக் கொண்டுள்ளதையும் இரா.சம்பந்தன் எடுத்துரைத்தார்.

சம்பந்தனின் விவேகமான இராஜதந்திர நடைமுறை யதார்த்தமான தலைமைத்துவத்துக்கு நன்றி தெரிவித்த ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரின் கருத்துக்களுக்கு தாம் மிக முக்கியத்துவம் கொடுப்பதாகவும், இந்த விடயங்கள் தொடர்பில் தமது சொந்த நாட்டு அரசுடன் ஐரோப்பிய ஒன்றியத்தில் எடுத்துரைப்பதாகவும் உறுதியளித்தனர் என்றுள்ளது.