மட்டக்களப்பு மாநகரசபையின் மேயராக சரவணபவன் தெரிவு!

மட்டக்களப்பு மாநகரசபைக்கு மேயர் மற்றும் பிரதி மேயரை தெரிவு செய்யும் சபையின் முதலாவது அமர்வு இன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு மாநகரசபைக்கு 38 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். இதில் 21 உறுப்பினர்கள் மக்கள் தெரிவின் மூலமும் 17 உறுப்பினர்கள் விகிதாசார அடிப்படையிலும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் 17 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்த நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் நான்கு உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பில் 04 உறுப்பினர்களும், தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு சார்பில் நான்கு உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் ஒரு உறுப்பினரும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் 05 உறுப்பினர்களும், சுயேட்சைக்குழு 01,சுயேட்சைக்குழு 02, சுயேட்சைக்குழு 04 ஆகியவற்றின் சார்பில் தலா ஒரு உறுப்பினருமாக 38 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இன்றயை அமர்வின் போது திறந்த வாக்கெடுப்பினை மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்ட நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில் தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு உறுப்பினர் சி.சோமசுந்திரத்தின் பெயர் முன்மொழியப்பட்டதுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் தியாகராஜா சரவணபவனின் பெயரும் முன்மொழியப்பட்டு வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது.

இதன்போது தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு உறுப்பினர் இருவர் வாக்களிக்காமல் நடுநிலை வகித்ததுடன் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஈ.பி.டி.பி.என்பன தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவாக வாக்களித்தன.

இதனடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 25 வாக்குகளையும் தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு உறுப்பினர் 11 வாக்குகளையும் பெற்ற நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் 14 மேலதிக வாக்குகளினால் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வராக தெரிவுசெய்யப்பட்டார்.

பிரதி முதல்வர் தெரிவு நடைபெற்றபோது தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்கிக்கொண்டிருந்த ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினரை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி உறுப்பினர் ஒருவர் பிரதி முதல்வருக்காக முன்மொழிந்தார்.

அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் கந்தசாமி சத்தியசீலன் முன்மொழியப்பட்டதுடன் ஐக்கிய மக்கள் சுதந்திரகூட்டமைப்பு உறுப்பினர் ஸ்ரீபன் ராஜா மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் சிவலிங்கம் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டு மும்முனை போட்டியாக வாக்களிப்பு நடைபெற்றது.

இதன்போது ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி முதல்வருக்காக முன்மொழியப்பட்ட உறுப்பினர் உட்பட மூன்று பேர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதி முதல்வராக முன்மொழியப்பட்டவருக்கு வாக்களித்ததுடன் 23வாக்குகளைப்பெற்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் க.சத்தியசீலன் பிரதி முதல்வராக தெரிவுசெய்யப்பட்டார்.

தி.சரவணபவன் மட்டக்களப்பு மாநகர சபையின் 14 ஆவது மேயராவார். தொடர்ந்து பிரதி மேயராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் க.சத்தியசீலன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.