மண்முனை தென்மேற்கு பிரதேச சபையும் கூட்டமைப்பு வசமானது!

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் மேற்கு பிரதேசசபையின் ஆட்சியதிகாரத்தினையும் பலத்த போட்டியின் மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.

மண்முனை தென்மேற்கு பிரதேச சபைக்கான தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவுசெய்யும் வகையிலான முதலாவது பிரதேச சபை உறுப்பினர்களுக்கான அமர்வு இன்றைய தினம் இடம்பெற்றது.

இதன்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சி.புஷ்பலிங்கம் தவிசாளராகவும், பொ.கோபாலபிள்ளை பிரதி தவிசாளராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம் தலைமையில் ஆரம்பமான இந்த சபை அமர்வில் மண்முனை தென் மேற்கு பிரதேசசபைக்கு தெரிவுசெய்யப்பட்ட 16 உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

இதனடிப்படையில் தலைவர் தெரிவுக்கான பெயர்களை பிரேரிக்குமாறு கோரப்பட்டதற்கு இணங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சி.புஸ்பலிங்கம் மற்றும் தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பின் பி.தேவநேசராசா ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன.

இவர்கள் மீதான திறந்த வாக்கெடுப்பு கோரப்பட்டதையடுத்து சி. புஸ்பலிங்கத்திற்கு ஆதரவாக 08 வாக்குகளும் பி.தேவநேசராசாவுக்கு ஆதரவாக 07 வாக்குகளும் வழங்கப்பட்டன.

ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் ஒருவர் நடுநிலை வகித்ததன் காரணமாக ஒரு வாக்கினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் சி.புஸ்பலிங்கம் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார்.

இதேபோன்று பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் பொ.கோபாலபிள்ளையும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர் ம.குகநாதனின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டது.

இதற்கு ஆதரவான வாக்கெடுப்பின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் பொ.கோபாலபிள்ளை 09 வாக்குகளைப்பெற்று பிரதி தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டார். பிரதி தவிசாளருக்கு போட்டியிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர் ம.குகநாதன் 05 வாக்குகளைப் பெற்றிருந்தார்.

இன்றைய வாக்கெடுப்பின்போது தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவாக வாக்களித்திருந்ததுடன் ஐக்கிய தேசிய கட்சியும் ஆதரவு வழங்கியிருந்தது. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியும் தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்கியிருந்தது.

இதுவரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த நான்கு சபைகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே கைப்பற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.