வடக்கில் மிக வேகமாக காணிகள் யாவும் அரசாங்கத்தால் விழுங்கப்பட்டு வருகின்றது : வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன்!

அரசாங்கத்தால் காணி அபகரிப்பு முல்லைத்தீவு – வவுனியா மாவட்டங்களில் மிக வேகமாக நடைபெற்று வருவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபையில் இன்று இடம்பெற்று வரும் அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

முல்லைத்தீவு – வவுனியா மாவட்டங்களில் மிக வேகமாக அரசாங்கத்தால் காணி அபகரிப்பு செய்யப்பட்டு வருகின்றன. இதனால்தான், இன்று இந்த விசேட அமர்வை ஒழுங்குபடுத்தியுள்ளோம் என்றும் கூறியுள்ளார்.

கரைத்துறைப்பற்றின் காணிகள் யாவும் மகாவலியால் விழுங்கப்பட்டு வருகின்றது. ஏற்கனவே மணலாறு வெலிஓயா ஆகிவிட்டது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மகாவலி அதிகாரசபைச் சட்டம் 1979ஆம் வருடத்தின் 23ஆவது சட்டமாகும். அதன் முக்கிய நோக்கங்கள் உணவு உற்பத்தி, நீர்சக்தி உற்பத்தி, காணியில்லாதவருக்கு காணி வழங்கல் மற்றும் வெள்ளத்தடுப்பு ஆகியனவாகும்.

குறித்த சட்டத்தின் அதிகார வரம்பினுள் இருக்கும் வனங்கள், வனவிலங்குகள், நீர்ப்பாசனம், விவசாய சேவைகள், விவசாயம் போன்றவற்றின் நிர்வாகமும் அவற்றைக் கொண்ட நிலங்களும் மகாவலி அதிகார சபையின் கட்டுப்பாட்டுக்குள் வருவன.

குறித்த சட்டத்தின் பிரிவு 3ன் கீழ் மகாவலிக்குப் பொறுப்பான அமைச்சர் ஜனாதிபதியின் ஒப்புதலுடன் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படும் கட்டளையின் மூலம் எந்த ஒரு நிலப் பகுதியையும் விசேட நிலப்பகுதியாகப் பிரகடனப்படுத்தலாம்.

குறித்த கட்டளைக்கு நாடாளுமன்றில் பின்னர் ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

1979ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மாகாவலி அதிகார சபைச் சட்டம் எதனையும், கணக்கில் எடுக்காது தான்தோன்றித் தனமாக தனது வேலைகளைச் செய்து கொண்டு போகின்றது.

காணிகளைக் கைவசம் வைத்திருப்பது மட்டுமன்றி பயனாளிகளுக்குக் கைமாற்றவும் அது உரித்து கொண்டிருக்கின்றது.

அண்மையில் அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்த போது மகாவலி அதிகார சபைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்று கோரியிருந்தேன். அவர் அதுபற்றி பரிசீலிப்பதாக உத்தரவாதம் அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அது அவ்வளவு சுலபமன்று. புதியதொரு சட்டத்தை மாகாண சபைகளுக்கு அளிக்கப்பட்ட பதின்மூன்றாம் திருத்தச்சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாகத் தயாரித்து ஏற்ற பின்னரே மகாவலி அதிகார சபைச் சட்டத்தில் கைவைக்க முடியும்.

அதற்கிடையில் முல்லைத்தீவை முற்றிலும் தன்வசம் கொண்டு வந்துவிடும் மகாவலி அதிகார சபை. இது தான் யதார்த்தம் என்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.