மாவை சேனாதிராஜாவுடன், வட மாகாணசபை உறுப்பினர்கள் முல்லைத்தீவிற்கு படையெடுப்பு!

முல்லைத்தீவில் சட்டத்திற்கு புரம்பான வகையில் இடம்பெற்று வரும் சிங்கள குடியேற்றங்களை பார்வையிட தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜாவுடன், வட மாகாணசபை உறுப்பினர்கள் இன்று அங்கு விஜயம் செய்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று காலை 9 மணியளவில் ஒன்று கூடிய குறித்த தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அமைதியான முறையில் கலந்துரையாடல் ஒன்றை ஏற்படுத்தியுள்ளனர்.

பின்னர் மாயாபுரம் மற்றும் கோயிலாபுரம் மகாவலி எல்வளைய திட்டம் உள்ளிட்ட சிங்கள குடியேற்ற திட்டங்களை பார்வையிடுவதற்காக அவர்கள் குறித்த பகுதிக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், தமிழ் மக்களுக்கான தீர்வு திட்டத்தை அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களின் இருப்பையே கேள்விக்கு உள்ளாக்கும் இந்த மகாவலி எல்வளைய திட்ட உள்ளிட்ட சட்டவிரோத குடியேற்றங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என அண்மையில் வட மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் வட மாகாண சபையில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இவ்வாறான சட்டவிரோத குடியேற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு அனைத்து வட மாகாணசபை உறுப்பினர்களும் முல்லைத்தீவிற்கு வர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.