முதலில் நம்பிக்கையில்லா பிரேரணை வரட்டும்! பதிலடி கொடுக்க தயாராகின்றார் சம்பந்தன்!

முதலில் நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைக்கட்டும். அதற்கு தக்க பதிலை அப்போது நான் வழங்குவேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

பிரதமருக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடைந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுக்கு எதிராக மஹிந்த அணியால் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று கொண்டுவரப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே சம்பந்தன் இதை குறிப்பிட்டுள்ளார்.

“மஹிந்த அணி முதலில் எனக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவரட்டும். சபாநாயகரிடம் அவர்கள் அதனை சமர்பித்த பின் அவர்களுக்கு தக்க பதிலை நான் கூறுவேன்.

அதுவரை பொறுமையாக இருப்பேன்.” என்று சம்பந்தன் கூறியுள்ளார்.

இதேவேளை, “எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை எங்களால் கொண்டு வர முடியாது. ஆனால் அந்த பதவியில் இருந்து அவரை நீக்குவதற்கு கூட்டு எதிர்க்கட்சி சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கின்றது.

தகுதியான எதிர்க்கட்சித் தலைவரை நியமிக்க சர்வதேசம் வரை சென்று தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.