கடந்த ஆட்சி போலவே மீண்டும் வாகரைப் பிரதேசத்தில் அட்டகாசம்!

கடந்தகால ஆட்சியில் மேற்கொண்ட பாணியிலே வாகரை பிரதேசசபை உறுப்பினரிடத்தில் அட்டகாசம் மேற்கொண்டுள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறீநேசன் தெரிவித்துள்ளார்.

வாழைச்சேனை கிண்ணையடி மில்லர் விளையாட்டுக் கழகத்தின் சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழா கழக மைதானத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

தேர்தல் நிரந்தரமாக பகைகளை உருவாக்குவதாகவோ, எதிரிகளை உருவாக்குவதாகவோ ஒரு சில்லறைத்தனமான செயற்பாட்டை ஏற்படுத்துவதாகவோ அமைந்து விடக்கூடாது.

எனவே தேர்தலை மறந்து அடுத்த கட்டமாக வட்டாரத்தின் அபிவிருத்திக்காக ஒன்றுபட்டு இயங்க வேண்டும்.

வாகரைப் பிரதேச சபையினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைப்பதற்கு உதவி செய்தமைக்காக வாகரை பிரதேச சபை உறுப்பினர் சந்திரமோகன் என்பவரது படகு மற்றும் வலைகளை எரித்து பழிவாங்கிய செயற்பாடு இடம்பெற்றுள்ளது.

இந்த செயற்பாட்டை போட்டி போட்டு தோற்றவர்கள் செய்ததாக அறியக் கூடியதாக இருக்கின்றது, உழைப்புக்குரிய உபகரணத்தினை அழித்து விட்டதாக பெருமிதம் கொண்டாலும் கூட அவரது உழைப்பின் மூலமாக 25 பேர் வாழ்வாதாரத்தைப் பெறக்கூடியதாக இருந்தது.

தான் மட்டும் வாழாது கிராமத்தை சேர்ந்தவர்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும் நோக்கில் செயற்பட்ட பிரதேச சபை உறுப்பினரின் படகும் வலைகளும் எரிக்கப்பட்டதால் கிட்டத்தட்ட 23 இலட்சம் ரூபா நஷ்ட்டத்தை எதிர்நோக்கி உள்ளார்.

அடாவடித்தனம், அட்டகாசம், அராஜகம் என்பன கடந்த கால ஆட்சியில் அரங்கேற்றப்பட்டது, அதன் பிற்பாடு இவ்வாறு அட்டகாசம் இல்லாமல் இருந்தாலும் பழைய பாணியில் இந்த அட்டகாசத்தை ஒரு கீழ்த்தரமான செயற்பாட்டாக செய்துள்ளனர்.

தோல்வி ஏற்படும்போது அதனை தாங்கிக்கொள்ளும் பக்குவம் இருக்கவேண்டும், வெற்றிப்பெற்றால் பட்டாசு கொழுத்துவதோ அல்லது தோல்வி ஏற்பட்டால் வெற்றி பெற்றவர்களின் உடமைகளை நாசம் செய்வதோ கூடாத காரியமாகும்.

தோல்வி ஏற்பட்டால் மற்றவர்களுக்கு பங்கம் விளைவிக்கும் விதத்தில் செயற்பட்டால் இவர்கள் நிரந்தரமாக மக்கள் மத்தியில் நிலைக்க மாட்டார்கள் என குறிப்பிட்டுள்ளார்.