சர்வதேசத்தை நாடுகின்றது கூட்டமைப்பு! சம்பந்தன் குழு எடுத்துள்ள முடிவு!

அரசியல் தீர்வில் ஏற்பட்டுள்ள தேக்கநிலை குறித்து சர்வதேச சமூகத்துக்கு எடுத்துரைக்க இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

மைத்திரி – ரணில் தலைமையிலான கூட்டு அரசு தொடர்ந்தாலும், நெருக்கடியின்றி குழப்பமின்றி தொடர்வதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ள நிலையில், சர்வதேசத்தை நாடும் முடிவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ளது.

நல்லாட்சி அரசு எனக் கூறப்படும் கூட்டு அரசில் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும் அவை இறுதியில் மந்தகதியில் முன்னெடுக்கப்பட்டு வந்தன.

கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலுடன் அது முற்றிலுமாக கைவிடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டது.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் ஆளும் கூட்டு அரசுக்கு பாதகமாக வந்திருந்த நிலையிலும், உள்ளூராட்சி சபைத் தேர்தலின் பின்னர் கூட்டு அரசின் இரண்டு பிரதான கட்சிகளுக்குமிடையில் பிளவு ஏற்பட்டிருந்த நிலையிலும் புதிய அரசியலமைப்பு முயற்சியில் மூச்சே காட்டாத நிலைமை தொடர்கின்றது.

இந்த தேக்கநிலை நீடிப்பதை ஏற்றுக்கொண்டுள்ள இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, துரிதகதியில் தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

“கூட்டு அரசு நீடிக்குமென்றாலும் அந்த அரசு உறுதிப்பாட்டுடன், நெருக்கடியின்றி குழப்பமின்றி இயங்குவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருக்கின்றன. புதிய அரசியலமைப்பு முயற்சியில் ஏற்பட்டுள்ள தேக்கநிலை குறித்து சர்வதேச பிரதிநிதிகளுக்கு ஏற்கனவே எடுத்துரைக்கப்பட்ட நிலையில், தொடர்ந்தும் அதனை அவர்களுக்குத் தெரியப்படுத்தி அரசுக்கு அழுத்தம் கொடுப்போம்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.