துணுக்காய் பிரதேச சபை கூட்டமைப்பு வசம்!

முல்லைத்தீவு துணுக்காய் பிரதேச சபைக்கான தவிசாளர் தெரிவு இன்று மாலை பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், ஹாதர்மஸ்தான், சாந்தி சிறீஸ்கந்தராசா, வடமாகாண சபை பிரதிஅவைத்தலைவர் வ.கமலேஸ்வரன், விவசாய அமைச்சர் க.சிவனேசன், உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

வடமாகாண உள்ளுராட்சி மன்ற ஆணையாளர் பற்றிக் டி.றஞ்சன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தவிசாளர் தெரிவிற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அ.பஞ்சலிங்கம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினை சேர்ந்த பெ.நடேசனும் போட்டியிட்டனர்.

பகிரங்க வாக்கெடுப்பு நடத்துவதா அல்லது இரகசிய வாக்கெடுப்பு நடத்துவதா என ஆணையாளரால் பிரதேச சபை உறுப்பினரிடம் கேட்கப்பட்டது.

அதற்கமைய, பகிரங்க வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று 13 உறுப்பினர்களும் தெரிவித்துள்ளதற்கு அமைவாக பகிரங்க வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது.

பகிரங்க வாக்கெடுப்பின்போது தமிழர் விடுதலை கூட்டணியினை சேர்ந்த வேட்பாளர் ச.சுயந்தன் கூட்டமைப்பின் தெரிவான தவிசாளருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதால் 7 வாக்குகளை தமிழ் தேசியக்கூட்டமைப்பு பெற்று அ.அமிர்தலிங்கத்தை தெரிவு செய்துள்ளார்.

உப தவிசாளருக்கான வாக்கெடுப்பும் பகிரங்க வாக்கெடுப்பு மூலம் விடப்பட்டது.

உப தவிசாளர்களாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் த.சிவகுமார் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினை சேர்ந்த உ.பார்த்தீபனும் போட்டியிட்டனர். இதில் 7 வாக்குகளை பெற்று த.சிவகுமார் தெரிவாகியுள்ளார்.

பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தெரிவாகி துணுக்காய் பிரதேச சபையினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றி ஆட்சியமைத்துள்ளது.