தமிழ் இனம் இருக்கும் வரை அன்னையினது புகழ் நீடித்து நிலைத்திருக்கும்

தமிழ் மக்களின் விடுதலைக்காக அடக்குமுறைகளையும் வன்முறைகளையும் எதிர்த்து உண்ணா நோன்பிருந்து அகிம்சை வழியில் போராடி தன் இன்னுயிரை ஈகம் செய்த தியாகத்தின் சின்னமாய் விளங்கும் அன்னை பூபதியின் தியாகம் காலத்தால் மறக்க முடியாதது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

அன்னை பூபதியின் நினைவு நாள் எழுச்சி நிகழ்வு இன்று கிளிநொச்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக் காரியாலயமான அறிவகத்தில் ஆரம்பமாகியுள்ளது.

இந்த நிகழ்வு, பச்சிலைப்பள்ளிப் பிரதேச சபைத் தவிசாளர் சு.சுரேன் தலைமையில் இடம்பெற்றுள்ளது. இதில், கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இலங்கை இந்திய இராணுவம் எமது தமிழ் மக்கள் மீது புரிந்த சொல்ல முடியாத வன்முறைகளை எதிர்த்து அதனை நிறுத்துமாறு கோரி எமது மக்களது விடுதலையை வலியுறுத்தி உண்ணா நோன்பிருந்து தன்னுயிரை ஈகம் செய்த அன்னை பூபதியினது தியாகம் என்றென்றும் போற்றத்தக்கது.

எமது இனம் இருக்கும் வரை அன்னையினது புகழ் நீடித்து நிலைத்திருக்கும் என்றும் கூறியுள்ளார்.

இதேவேளை, மேற்படி நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர்களான த.குருகுலராசா, சு.பசுபதிப்பிள்ளை, கரைச்சிப் பிரதேச சபை தவிசாளர் அ.வேழமாலிகிதன், கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் பிரதேச, வட்டார அமைப்பாளர்கள், செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் உணர்வெழுச்சியாகக் கலந்துகொண்டிருந்தனர்.