வாழ்வுரிமையை வலியுறுத்தி தமிழ் தேசிய மே தினம் முழங்காவிலில்!

இரணைதீவு மக்களின் வாழ்வுரிமை, தொழிலுரிமையை வலியுறுத்தியும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியை வலியுறுத்தியும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தமிழ் தேசிய மே தினம் நிகழ்வுகள் எழுச்சியாக இம்முறை முழங்காவிலில் இடம்பெறவுள்ளன.

கிளிநொச்சி மாவட்ட தமிழ் தேசிய மே தினம் நிகழ்வுகள் இம்முறை முழங்காவில் விநாயகர் விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் தமிழ் தேசிய மே தினம் நிகழ்வுகள் எதிர்வரும் முதலாம் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு நாச்சிக்குடா சந்தியில் இருந்து ஊர்தி பவனிகளுடன் ஆரம்பமாகி, எழுச்சிப் பேரணி பிரதான வீதி வழியாக நகர்சந்தி முழங்காவில் விநாயகர் விளையாட்டு மைதானத்தைச் சென்றடைந்து, அங்கு ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் மாபெரும் மே தினக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

இக்கூட்டத்தில் தொழிற்சங்கப் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள் எனப் பலரது சிறப்புரைகளும் இடம்பெறவுள்ளன.

கடந்த 1990ம் ஆண்டு இடம்பெயர்ந்த நிலையில் 28 வருடங்களாக தமது சொந்த இடத்திற்குப் போவதற்காகக் காத்திருந்து, தற்போது போராடி வரும் மக்களது வாழ்வுரிமை, தொழிலுரிமையை வலியுறுத்தியும், தமது உறவுகளை தமது கண்முன்னே இலங்கை இராணுவமும் அதனது துணைப்படைகளும் பிடித்துச் சென்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி ஒரு வருடத்திற்கும் மேலாக போராடி வரும் அவர்களது உறவுகளுக்கு நீதியை வலியுறுத்தியும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்டத்திற்கான தமிழ் தேசிய மே தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

தமிழ் தேசிய மே தின நிகழ்வுகள் தொடர்பான முன்னாயத்த ஏற்பாட்டுக்கூட்டம் கிளிநொச்சி மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக் காரியாலயமான அறிவகத்தில் நேற்று மாலை 3.30 மணிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றுள்ளது.

இதில் வடமாகாணசபை உறுப்பினர்களான த.குருகுலராசா, சு.பசுபதிப்பிள்ளை மற்றும் கரைச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உபதவிசாளர்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.