கிளிநொச்சி மாவட்ட தமிழ் தேசிய இளைஞர் ஒருங்கிணைப்பு!

தமிழ் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் இளைஞர் அணியின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்ட தமிழ் தேசிய இளைஞர் ஒருங்கிணைப்புக் கூட்டம் இடம்பெற்றுள்ளது.

குறித்த கூட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளருமான சு.சுரேன் தலைமையில் இன்று காலை 9.30 மணியளவில் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

அத்துடன், மாவட்டத்தில் தமிழ் தேசியத்தை வலுப்படுத்தி தமிழர்களின் அபிலாசைகளை அடைவதற்குப் பலம் சேர்ப்பதுடன், தமிழ் பண்பாடு, கலை, கலாச்சாரம், தனித்துவம் என்பவற்றைக் கட்டிக் காத்தல் தொடர்பான தமது ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைத்துள்னர்.

இதன்போது, மாவட்ட தமிழ் தேசிய இளைஞர்களை ஒருங்கிணைந்து இளைஞர் மாநாடு நடத்துவது தொடர்பான தீர்மானங்களும் முன்மொழியப்பட்டதுடன், அதற்காக இளைஞர்களை ஒருங்கிணைப்பதற்கான இணைப்பாளராக பல்கலைக்கழக மாணவன் ந.குகதீஸ் மற்றும் ஆ.சீராளன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும், இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், வடமாகாண சபை உறுப்பினர்களான த.குருகுலராசா, சு.பசுபதிப்பிள்ளை, கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய பிரதேச சபைகளின் தவிசாளர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் பிரதேச மட்ட இளைஞர் அணி உறுப்பினர்கள், அமைப்பாளர்கள், செயற்பாட்டாளர்கள், கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெருமளவான இளைஞர், யுவதிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.