ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்!

பட்டத்தாரிகள் தெரிவு குறித்து ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தன் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

நாட்டில் வேலைவாய்ப்பற்றிருக்கும் 50,000க்கும் மேற்பட்டபட்டதாரிகளில் கணிசமான தொகையினரை இரண்டு வருடப் பயிற்சியில் இணைத்துக்கொண்டு, அப்பயிற்சியின் பின்பு அவர்களுக்கு நிரந்தர நியமனத்தை வழங்கும் பொருட்டு அரசாங்கம் மாவட்டச் செயலகங்களின் ஊடாக பட்டதாரிகளுக்கான நேர்முகப் பரீட்சைகளை அண்மையில் நடாத்தியிருந்தது.

இந்த நேர்முகப்பரீட்சையின் போது உச்சவயதெல்லை 35 வயதாக இருக்கும் என்றும், முதற் பட்டப்படிப்பின் பின்னர் பெற்றுக்கொண்ட மேலதிகக் கல்வி, விசேட தொழிற் தகைமை மற்றும் விளையாட்டுத் தகைமை போன்ற தகுதிகளுக்குக் கூடுதல் புள்ளிகள் வழங்கப்படும் எனவும், பெறப்பட்ட புள்ளிகள் நாடளாவிய அடிப்படையிலேயே கணிப்பிடப்பட்டுத் தெரிவுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், இதனால் வடக்குக் கிழக்குப் பட்டதாரிகள் கூடுதல் பாதிப்புக்குள்ளாக நேரிடும் எனவும் எதிர்க்கட்சித் தலைவரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.

இதன்படிபின்வரும் விடயங்களைக் கருத்திற்கொண்டுதெரிவுகளைச் செய்யவேண்டுமென ஜனாதிபதி மற்றும் பிரதம்ருக்கு எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் கடிதம் மூலம் கோரிக்கைவிடுத்துள்ளார்.

  • கல்வித்தகைமைகளைப் பெற்றுக் கொள்வதில் வடக்குக் கிழக்குப் பட்டதாரிகளுக்கு யுத்தம் மற்றும் பாதுகாப்புக் கெடுபிடிகள் காரணமாக கூடுதல் காலம் செலவிட நேர்ந்துள்ளமையால் ஆகக் கூடியவய தெல்லையை 35 இலிருந்து 40 வரை அதிகரிக்கவேண்டும்.
  • மேலதிகமாற்றுத் தொழிலாண்மைக் கல்வித் தகைமைகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்புவடக்குக் கிழக்குப் பட்டதாரிகளுக்கு யுத்தம் காரணமாகக் கிடைக்காமல் போனமையால் அவர்கள் ஏனைய மாவட்டப் பட்டதாரிகளுடன் சமமாகப் போட்டிபோட்டுக் கூடுதல் புள்ளிகள் பெறமுடியாத நிலைஉள்ளது.
  • வடக்குக் கிழக்கில் பொருளாதார அபிவிருத்தி மற்றும் வியாபார முயற்சிகள் அதிகம் இல்லாமை காரணமாக அந்தத் துறைகளில் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புக்கள் பெறும் சந்தர்ப்பம் இல்லாமையினால் அவர்கள் அரசதொழில் வாய்ப்புக்களையே எதிர்பார்த்திருக்க வேண்டியுள்ளது.
  • வடக்குக் கிழக்குப் பிரதேசங்களின் வேலைவாய்ப்பின்மை தேசியமட்ட அளவைவிட அதிக அளவில் காணப்படுவதோடு, இப் பிரதேசங்கள் கல்வித் துறைமற்றும் அபிவிருத்தியிலும் ஏனைய மாவட்டங்களை விடமிகவும் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது.
  • இந்நிலையில் தேசியமட்டத்தில் புள்ளிகளை நிரைப்படுத்தித் தெரிவுகளை மேற்கொண்டால், வடக்குக் கிழக்குப் பட்டதாரிகள் தெரிவுசெய்யப்படக்கூடியவாய்ப்புக்கள் மிகவும் குறைந்துவிடுமென்பதால் அவர்கள் மிகுந்த பாதிப்பை அடைவர். அதனால் புள்ளிகள் மாவட்டமட்டத்தில் நிரைப்படுத்தப்பட்டு விகிதசம அடிப்படையில் சகல மாவட்டங்களுக்கும் சமமான வாய்ப்பினை வழங்கும் பொருட்டு தெரிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறுசெய்வதன் மூலம் சகல மாவட்டங்களிலிருந்தும் பட்டதாரிகள் தெரிவு செய்யப்படக்கூடிய நிலைமை உருவாக்கப்படுவதால் சகலருக்கும் நியாயமும் சமவாய்ப்பும் கிடைக்கும்.