வடக்கில் நியமிக்கப்பட்ட சமுர்த்தி திணைக்களத்தின் சிங்கள சிற்றூழியர்கள் மீள அழைக்கப்படுவார்கள்: எம்.ஏ.சுமந்திரன்

வட மாகாணத்திற்கு நியமிக்கப்பட்ட சமுர்த்தி திணைக்களத்தின் சிங்கள சிற்றூழியர்கள் மீள அழைக்கப்படுவார்கள் என உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளதாக தமிழ் ஊடகம் ஒன்றிடம் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்

வடக்கு – கிழக்கில் சிங்கள சிற்றூழியர்கள் நியமிக்கப்படக் கூடாது என்பது உள்ளிட்ட 10 நிபந்தனைகளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்திருந்தது.

அந்தக் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதாக பிரதமர், கூட்டமைப்புக்கு எழுத்துமூலம் கடிதம் வழங்கியிருந்தார். இதற்கு அமைவாக, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கூட்டமைப்பு எதிர்த்திருந்தது.

வாக்குறுதி வழங்கி 20 நாட்களுக்குள்ளேயே, சமுர்த்தி திணைக்களத்தால் யாழ்ப்பாணத்தில் சிற்றூழியர்களாக சிங்களவர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

இந்த விடயம் தொடர்பில் தமிழ் ஊடகம் ஒன்று கேட்டபோதே சுமந்திரன் எம்.பி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக சமூகவலுவூட்டல் அமைச்சர் மலிக் சமரவிக்ரமவின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். இது தொடர்பில் ஆராய்ந்து அமைச்சர் எனக்குப் பதிலளித்தார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விடயத்தைத் தொடர்ந்து, சமூக வலுவூட்டல் அமைச்சராக இருந்த எஸ்.பி.திஸாநாயக்க பதவி விலகியிருந்தார்.

அவர் பதவி விலகிச் செல்வதற்கு சில தினங்களுக்கு முன்னர் 300 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் 190 பேர், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்காவின் தொகுதியைச் சேர்ந்தவர்கள்.

இந்த நியமனங்கள் தொடர்பாக ஆராயப்படும் அதேவேளை, வட மாகாணத்திற்கு அனுப்பப்பட்ட சிங்கள சிற்றூழியர்களை மீள அழைக்குமாறு அமைச்சர், செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளாதாகவும் அவர் கூறியுள்ளார்.