வியாழேந்திரன் எம்.பியின் முயற்சியில் பின்தங்கிய பாடசாலைக்கு புதிய கட்டிடம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசத்தில் உள்ள பின்தங்கிய பாடசாலைகளின் பௌதீக வளங்களின் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்து அப்பகுதி மாணவர்களின் கல்வி நடவடிக்கையினை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்கீழ் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பாலர்சேனை கலாசூரி விநாயக வித்தியாலத்தில் இரண்டு மாடிக்கட்டிடம் ஒன்று அமைப்பது தொடர்பான கூட்டம் இன்று பாடசாலையில் நடைபெற்றது.

கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக தகர கொட்டகையில் குறித்த பாடசாலை மாணவர்கள் கற்றல் செயற்பாடுகளை மேற்கொண்டுவரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் மேற்கொண்ட முயற்சியினால் இந்த கட்டிடம் அமைக்கப்படவுள்ளது.

இதற்கென 65 இலட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஆராயும் கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட கல்வித்திணைக்களங்களுக்கான பொறியியலாளர் ஜனாப் ஹக்கீம் உட்பட மட்டக்களப்பு மேற்கு வலய தொழில்நுட்ப உத்தியோகத்தரும் கலந்து கொண்டார்.

மிகவும் பின்தங்கிய பகுதிகளில் உள்ள மாணவர்கள் கல்வி இடைவிலகல் அதிகரித்துள்ள நிலையில் மாணவர்கள் தமது கற்பித்தல் செயற்பாடுகளை இலகுவில் மேற்கொள்ளும் வகையில் இந்த கட்டிடம் அமைக்கப்படவுள்ளது.

மிகவும் பின்தங்கிய பகுதியாக காணப்படும் பாலர்சேனையில் முறையான பாடசாலைக்கட்டிடம் இல்லாத நிலையில் கடந்த ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனின் கோரிக்கைக்கு அமைய கனடா நாட்டில் வசிக்கும் பெண்ணொருவரின் உதவியுடன் ஒரு வகுப்பறைக்கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது.

அதிலும் தகரக் கொட்டகையிலுமே மாணவர்கள் தமது கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொண்டுவந்த நிலையில் புதிய கட்டிடம் அமைப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.