தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தினப் பிரகடனம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தின நிகழ்வுகள் முழங்காவில் பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

நாச்சிக்குடா சந்தியிலிருந்து தொழிலாளர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை சித்தரிக்கின்ற ஊர்திகளுடன் கூடிய பேரணியாக முழங்காவில் விநாயாகர் விளையாட்டுக்கழக மைதானத்தைச் சென்றடைந்து அங்கு மே நாள் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

நிகழ்வில் கடற்தொழில் சங்கங்கள், கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவுச்சங்கங்கள், தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள், ஆகியோரின் பங்குபற்றுதலுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சாள்ஸ் நிர்மலநாதன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, ஈ.சரவணபவன், சிவஞானம் சிறிதரன், வடமாகாண சபை உறுப்பினர்களான சு.பசுபதிப்பிள்ளை, த.குருகுலராஜா, மற்றும் பச்சிலைப்பள்ளி, பூநகரி, கரைச்சி, ஆகிய பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், கட்சியின் செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தின பிரகடனத்தில் பின்வருவன வலியுறுத்தப்பட்டுள்ளன,

தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்த இரணைதீவு முழுமையாக விடுவிக்கப்படவேண்டும்.

கிளிநொச்சி மாவட்டத்தில் வட்டக்கச்சி விவசாயப் பண்ணை, பூநகரி பிரதேசத்திற்குட்பட்ட மரமுந்திரிகைப் பண்ணை, தென்னந்தோட்டம், என்பன உள்ளடங்கலாக மூவாயிரம் ஏக்கர் நிலப்பரப்பு இன்னமும் விடுவிக்கப்படாது படையினர் வசமிருக்கின்றது. இவை விடுவிக்கப்பட்டு விவசாயிகள் தொழில் செய்து வாழுகின்ற உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் உரிய சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உழைப்பாளர்களுக்கு நீதியான விசாரணை மேற்கொண்டு காணாமல் ஆக்கப்பட்ட உழைப்பாளர்களை அவர்களது குடும்பங்களுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

முன்பள்ளிகள் மற்றும் பாடசாலைகள் ஆகியவற்றில் கல்விக்கொள்கைகள் மீது திட்டமிட்டு திணிக்கப்படுகின்ற இராணுவத்தலையீடுகள் நிறுத்தப்பட்டு கல்வித்திணைக்களத்தினால் சுயமாக நிர்வாகிக்க இடமளிக்கவேண்டும்.

கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்தினால் சேதமடைந்து காணப்படுகின்ற பரந்தன் இராசாயனக்கூட்டுத்தாபனம் மற்றும் குறிஞ்சாத்தீவு , உப்பளம் ஆகிய கைத்தொழிற்சாலைகளை விடுவித்து உரிய முறையில் இயங்க வைத்து தொழில் வாய்ப்பற்றவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்கவேண்டும்.

கடற்தொழில் பாதிக்கும் வகையில் மேற்கொள்ளப்படுகின்ற இந்திய இழுவைப்படகுகள் மற்றும் ஏனைய இழுவைப்படகுகளின் சட்டவிரோதத் தொழில்கள் நிறுத்தப்பட வேண்டும்.

உள்ளூர் உற்பத்தி விவசாயப் பொருட்களுக்கு விலை நிர்ணயம் பாதுகாக்கப்பட வேண்டும்.

இராணுவத்தினர் நடத்திவரும் சிகை அலங்கரிப்பு நிலையங்கள் தடைசெய்யப்பட வேண்டும் போன்ற விடயங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன.