தீர்வு கிடைக்க அணிதிரள்வோம்! சம்பந்தன் அழைப்பு!

இலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன் கருதி அரசியல் பேதங்களுக்கு அப்பால், தேசியப் பிரச்சினைக்கு அடிப்படையாக அமைந்துள்ள காரணங்களுக்குத் தீர்வு காண்பதற்காக அணிதிரளுமாறு அனைத்து அரசியல் கட்சிகளிடமும் மே தினத்திலே நான் வேண்டுகோள் விடுக்க விரும்புகின்றேன் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அவர் அனுப்பிவைத்துள்ள மேதினச் செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

உலக வரலாற்றிலே மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தினம் பற்றி நாம் நினைவுகூர்கின்ற வேளையில், இந்நாட்டு மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் ஒன்றினை பெற்றுக் கொடுப்பதற்காக தமது உச்ச பங்களிப்பினை வழங்கும் எமது நாட்டின் தொழிலாளர் வர்க்கத்தினருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

தொழிலாளர் வர்க்கத்தினர் எமது நாட்டின் பொருளாதார அபிவிருத்தியின் முதுகெலும்பு ஆவார்கள். எனவே அவர்களது உரிமைகள் மற்றும் நலன் என்பன பாதுகாக்கப்படுவதனை உறுதிசெய்தல் அவசியமாகும். எனினும் மக்கள் அனைவரையும் சமமாக மதித்தல், சம அந்தஸ்தளித்தல் மற்றும் மதிப்பளித்தல் என்பன எமது நாட்டின் தற்போதைய நடைமுறை நிர்வாகக் கட்டமைப்பினுள் காணப்படாமை கவலைக்குரிய விடயமாகும்.

இம்முறை சர்வதேச தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுகின்ற இச்சந்தர்ப்பத்திலே, எமது வலயத்திலே பொருளாதார வளர்ச்சியில் நாம் மிகவும் பின்னடைவதற்குச் காரணமாக அமைந்த காரணிகளை இனங்கண்டு அவற்றிற்கு மூல காரணமான விடயங்களுக்கு தீர்வினைக்காணும் நோக்கில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளல் வேண்டும்.

நிரந்தர சமாதானம் மற்றும் பொருளாதார மேம்பாடு என்பவற்றின் உச்ச பயனை அடைந்துகொள்வதற்கு நாட்டு மக்கள் அனைவரையும் சமமாகவும், அபிமானத்துடனும், சுய கௌரவத்துடனும் மதிக்கக் கூடிய நாட்டின் உயரிய சட்டமான அரசியலமைப்புச் சட்டமொன்றை உருவாக்க வேண்டிய கட்டாய தேவையுள்ளது.

எமது தாய் நாட்டிற்கு இம்மகத்தான தேவையினை நிறைவேற்றிக்கொள்வதற்குக் காணப்பட்ட பல்வேறு வாய்ப்புக்கள் கடந்த கால வரலாற்றிலே எம்மை விட்டு கை நழுவிச் சென்றுள்ளமையால், அவ்வாறானதொரு மற்றுமொரு வாய்ப்பினை நாம் இழந்துவிட முடியாது.

இந்நாட்டின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன் கருதி அரசியல் பேதங்களுக்கு அப்பால், தேசியப் பிரச்சினைக்கு அடிப்படையாக அமைந்துள்ள காரணங்களுக்குத் தீர்வு காண்பதற்காக அணிதிரளுமாறு அனைத்து அரசியல் கட்சிகளிடமும் மே தினத்திலே நான் வேண்டுகோள் விடுக்க விரும்புகின்றேன் என்றுள்ளது.