மட்டக்களப்பு வெல்லாவெளியில் உத்வேகத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினம்!

உரிமைகளை வென்றெடுக்கும் புதிய உத்வேகத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மேதின நிகழ்வுகள் மட்டக்களப்பு வெல்லாவெளியில் இன்றைய தினம் பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றுள்ளது.

வெல்லாவெளி, போரதீவுப்பற்றுப் பிரதேச சபைச் சந்தியியிலிருந்து கூட்டமைப்பின் மே தின ஊர்வலம் ஆரம்பமாகி வெல்லாவெளி பொது விளையாட்டு மைதானத்தை வந்தடைந்து அங்கு மே தின நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தின பிரகடனத்தை முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான கிருஸ்ணப்பிள்ளை துரைராசசிங்கத்தினால் வாசிக்கப்பட்டது.

பன்முகத்தன்மையை உரத்துச் சொல்லி வலியுறுத்த, தமிழ் தேசியத்தின் நியாயங்களுக்கு வலுச்சேர்க்க, கூட்டாட்சியைக் கொலுவேற்றும் புதிய அரசியல் அமைப்பின் உருவாக்கத்தை முன்நகர்த்துமாறு அழுத்தம் கொடுக்க, நிலமீட்பு, அரசியல் கைதிகளின் விடுவிப்பு, மீள்குடியேற்றம், காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான கரிசனை, போர் விதவையாரின் பொருளாதார மேம்பாடு, இளையோரின் வேலைவாய்ப்பு, மற்றும், தொழிலாளர் துயர்துடைப்பு, என்பன தொடர்பான செயற்பாடுகளை வேகப்படுத்துமாறு பல வேண்டுகோள்களுடன் குறித்த மேதின நிகழ்வுகள் அனுஸ்டிக்கப்பட்டன.

மேலும், போரதீவுப்பற்றுப் பிரதேச சபையின் தவிசாளர் யோ.ரஜனியின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் பிரமுகர்கள், கட்சியின் அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டிருந்தனர்.