இரணைதீவு மக்களை கடல் மார்க்கமாக சென்று சந்தித்த த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

இரணைதீவு பகுதியில் சாத்வீக வழியில் தமது பூர்வீக நிலங்களை மீட்பதற்காக போராடிவரும் மக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய சென்று பார்வையிட்டு, அவர்களுடன் கலந்துரையாடியுள்ளனர்.

கிளிநொச்சி இரணைதீவு பகுதியில் தமது பூர்வீக நிலங்களை விடுவிக்கக்கோரி போராடிவரும் மக்களை பல்வேறு தரப்புக்களும் சந்தித்து கலந்துரையாடி வருவதுடன், தங்களது ஆதரவினையும் வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சிவஞானம் சிறீதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் த.குருகுலராஜா ஆகியோர் இன்றைய தினம் சென்று பார்வையிட்டுள்ளனர்.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்ததுடன், அவர்களது போராட்டத்திற்கு தமது முழுமையான ஆதரவுகளையும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இரணைதீவு மக்கள் பல போராட்டத்திற்கு மத்தியில் கடந்த மாதம் 23ஆம் திகதியில் இருந்து கடற்படையின் தடையையும் மீறி தாமாகவே குறித்த பகுதிக்குச் சென்று குடியமர்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த காணிகளை துப்பரவு செய்துவரும் இவர்கள் தாம் இரணைதீவில் சென்று நிரந்தரமாக வசிப்பதற்குரிய எவ்வித அடிப்படைகள் வசதிகள் இன்றி தவிப்பதாகவும், இதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அங்கு சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அம்மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இது தொடர்பில் விஜயம் செய்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது, கடந்த காலங்களிலும் சரி எப்போதும் இரணைதீவு மக்களுக்காக பல இடங்களிலும் குரல் கொடுத்து வருகின்றதுடன் மக்களின் போராட்டங்களிலும் கலந்து கொண்டுள்ளோம்.

உடனடியாக நீர் வசதி, கிடுகுகள் என்பன வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் பிரதேச சபையூடாக முன்னெடுக்கப்படும்.

சில நாட்களில் நாடாளுமன்றம் கூடும்போது தங்கள் கோரிக்கைகளை நாம் அரசாங்கத்திடம் முன்வைத்து மிகவும் விரைவாக தங்களின் கோரிக்கைகளை நாம் நிறைவேற்றுவதற்கு நாம் தயாராக உள்ளோம் என்பதோடு இரணைதீவு மக்கள் போராட்ட வரலாற்றில் பல இழப்புக்களை சந்தித்ததுடன் தற்போது பலர் காணாமல் ஆக்கப்பட்டும் மாவீரர்களாகவும் உள்ளனர் என குறிப்பிட்டனர்.

மேலும், போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கான உலருணவு மற்றும் சத்துணவுப் பொருட்களை தனியார் நிறுவனங்கள் இரண்டு இணைந்து வழங்கி வைத்துள்ளன.

அத்துடன், பூநகரி, கரைச்சி பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.