முதலமைச்சர் தமிழ் மக்களை உருக்குலைக்க முற்படக் கூடாது: சிவமோகன்

வடமாகாண சபையில் இதுவரை எத்தனை கணக்காய்வு அறிக்கைகள் வந்தது. தமது கடமைகளை சரியாக செய்யத் தவறியவர் தமிழ் மக்களை உருக்குலைக்க முற்படக் கூடாது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

பல்வேறு அரசியல் குழப்ப நிலைகள் தென்னிலங்கையிலும், வடக்கிலும் ஏற்பட்டுள்ள நிலையில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் புதிய கட்சி ஒன்றை அமைத்து அடுத்து வரும் மாகாண சபையில் போட்டியிடப் போவதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

விக்னேஸ்வரன் தென்னிலங்கையை அடிப்படையாக கொண்டவர், நாடு சுதந்திரம் பெற்ற போது தென்னிலங்கையைச் சேர்ந்த தமிழர்கள் தான் எம்மை கொழும்பில் அடைமானம் வைத்திருந்தார்கள்.

தமிழர்களின் உரிமைகளையும் அடைமானம் வைத்திருந்தார்கள். பிரித்தானியர் சுதந்திரம் வழங்கிய போது தமிழருக்கும் தனியான ஆட்சி அலகு தேவை என கோரியிருந்தால் நிச்சயமாக கிடைத்திருக்கும்.

அல்லது சமஸ்டி முறையிலான ஒரு யாப்பு வகுக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இவை அனைத்தையும் தவற விட்டது தென்னிலங்கையின் தமிழ் தலைமைகள். அந்த நேரத்தில் அவர்கள் தான் எம்மை ஆண்ட ஆதிக்க சக்திகளாக இருந்தனர்.

அவர்கள் அந்நியரின் கைகளில் துவண்டு போய் இருந்தார்கள். அது போல் மீண்டும் ஒரு தென்னிலங்கை ஆதிக்கத்திலும், தென்னிலங்கை சிங்கள இனத்துடன் சம்மந்தம் வைத்திருக்கின்ற விக்னேஸ்வரன் போன்றவர்கள் எல்லாம் எமது மக்களின் தலைவிதியை தீர்மானிக்க முடியாது.

அப்படி விக்னேஸ்வரன் அவர்கள் வெளியேறி புதிய கட்சி தொடங்கினால் அவரது முகம் உடைத்தெறியப்பட்டு உண்மை வரும். பொய்மையின் வெளிப்பாட்டில் தான் அவரது செயற்பாடுகள் இதுவரை இருந்தது.

ஆன்மீகம் என்ற ஒரு பூச்சு பூசிக் கொண்டு அவரது செயற்பாடுகள் தவறாகவே இருந்தது. வடமாகாண சபையில் இதுவரை எத்தனை கணக்காய்வு அறிக்கைகள் வந்தது. கணக்காய்வு அறிக்கைகளைக் கூட ஒழுங்காக செய்யவில்லை. தனது கடமைகளை சரியாக செய்யவில்லை.

நிர்வாகத்தை சரியாக செய்யவில்லை. அப்படியான இவர் தமிழ் மக்களை உருக்குலைக்க முற்படக் கூடாது. பெற்றுக் கொண்ட பதவியை சரியாக நிறைவேற்ற வேண்டும். அதை நிறைவேற்ற முடியாவிட்டால் ஒதுங்கி நின்று பார்க்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.