முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – 2018 – முதலமைச்சரின் வேண்டுகோள்!

கௌரவ முதலமைச்சரின் வேண்டுகோள் – முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – 2018 என தலைப்பிட்டு வடமாகாண முதலமைச்சரினால் கையொப்பமிட்பட்ட அழைப்பு அறிக்கை ஒன்று இன்று வெளியிடப்பட்டுள்ளது.

07-05-2018ம் திகதியாகிய இன்று எமது மாகாணசபை உறுப்பினர்கள் கூட்டமொன்று முதலமைச்சரின் மாநாட்டு மண்டபத்தில் காலை 10.00 மணிக்கு நடைபெற்றது.

மேற்படி நினைவேந்தல் நிகழ்ச்சி சென்ற மூன்று வருடங்கள் நடைபெற்றது போன்று இவ்வருடமும் தொடர்ந்து வடமாகாணசபையால் ஒழுங்குபடுத்தி நடாத்தப்பட வேண்டும் என்பது பிரசன்னமாகியிருந்த எமது உறுப்பினர்கள் யாவரினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடைபெறும் அமைவிடமானது பிரதேச சபைக்குரிய காணியாகும். சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை எடுக்க ஒரு உறுப்பினர் குழு நியமிக்கப்பட்டது.

 

எமது இனத்திற்கு ஏற்பட்ட ஒரு பேரவலத்தின் நினைவுகூரும் நிகழ்வானதால் எம்முடன் ஒன்றுசேர்ந்து மேற்படி நடவடிக்கைகளில் ஈடுபட பல அமைப்புக்கள் தமது விருப்பத்தினை தெரிவித்துள்ளன. அவ்வாறான அக்கறையுடைய, கரிசனையுடைய அனைத்து அமைப்புக்கள் எமது மேற்படி குழுவுடன் 09-05-2018 அன்று முற்பகல் 11.30 மணிக்கு கைதடி முதலமைச்சரின் மாநாட்டு மண்டபத்தில் கூடி இவ்வாறான நிகழ்வை ஒன்றுபட்டு எல்லோருடைய ஒத்துழைப்புடன் சிறந்த முறையில் நடாத்துவது சம்பந்தமாக ஆராயப்படும்.

நாட்டமுள்ள அனைத்து அமைப்புக்களின் பிரதிநிதிகள் இருவர் அவ்வவ்வமைப்புக்களின் சார்பாக குறித்த கூட்டத்திற்கு சமுகமளிக்குமாறு இத்தால் அழைக்கப்படுகின்றார்கள்.

க.வி.விக்னேஸ்வரன் – முதலமைச்சர் வடமாகாணம் என முதலமைச்சரினால் ஒப்பமிடப்பட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.