வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: கூட்டமைப்பு கோரிக்கை!

வடகிழக்கில் உள்ள அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு சக்தியாக இணைந்து செயற்படும்போதுதான் வடகிழக்கு இணைந்த சமஸ்டி ஆட்சியை நாங்கள் ஏற்படுத்தமுடியும்.

அதன்மூலமே எங்களை நாங்கள் ஆளக்கூடிய நிலைமை ஏற்படும் என அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் சிறி சபாரத்தினம் உட்பட முன்னாள் போராளிகளின் 32வது ஆண்டு நினைவினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட கால்பந்தாட்ட சங்கத்தின் அனுசரணையுடன் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் நடாத்திய “சிறிசபாரத்தினம் கிண்ணம்” மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

தலைவர் சிறி சபாரத்தினம் அவர்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காக தன்னை அர்ப்பணித்து, தமிழ் மக்களுக்கான விடிவை பெற்றுத்தரவேண்டும் என்பதற்காக பல போராட்டங்களை நடத்திய தியாகியாவார்.

வடகிழக்கு மக்களின் நியாயமான தீர்வை எட்ட வேண்டும் என்பதற்காக தன்னை தியாகம் செய்து இன்றுடன் முப்பத்திரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன.

இவர் வடகிழக்கு இணைந்த ஆட்சி முறையையும், தமிழ் மக்கள் தங்களை தாங்களே ஆளுகின்ற ஒரு தனிநாட்டை உருவாக்குகின்ற செயற்பாட்டிலும் ஈடுபட்ட மாவீரனாவார்.

இவரின் செயற்பாடானது சாவகச்சேரி பொலிஸ் நிலைய தாக்குதலுடன் தேசியத்திலும், சர்வதேசத்திலும் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்ட வீரர்களின் வெற்றியையும் வீரத்தையும் உலகறியச் செய்தது.

அதனடிப்படையிலே தமிழீழ விடுதலைப்போராட்டத்தை சர்வதேச நாடுகள் அங்கீகரித்தன. கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை பிரிப்பதற்காக சர்வதேசம் பலவழிகளிலும் செயற்பாடுகளை அரங்கேற்றியது.

ஆரம்ப காலகட்டத்தில் அகிம்சைப் போராட்டத்தை முன்னெடுத்த எமது தலைவர்கள் அகிம்சைப் போராட்டத்தின் மூலம் எமது மக்களுக்கான விடிவினை பெற்றுக்கொள்ள முடியாது என்பதை உணர்ந்து ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

ஆயுதப் போராட்டம் வலுப்பெற்றிருந்த காலகட்டத்தில் அப்போராட்டத்தினை உடைத்து இயக்கங்களை சின்னாபின்னப்படுத்தி தமிழர்களுக்கான தீர்வு கிடைக்கக்கூடாது என்பதற்காக தேசியத்திலிருக்கின்ற பேரினவாதிகளுடன் இணைந்து சர்வதேச நாடுகள் பலவும் இணைந்து பலவழிகளிலும் செயற்பட்டதை நாம் கண்டோம்.

பல வல்லரசுகள் எங்களை ஏமாற்றியிருக்கின்றன. எங்களது விடுதலைப் போராட்டத்தினை சீர்குலைத்திருந்தன. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மூலம் தமிழர்களுக்கான தனிநாடு கிடைக்கப் பெற்றால் தங்களது நாடு பாதிக்கப்படும் என்பதற்காக எங்களது போராட்டத்தை சீர்குலைத்தன.

அந்தப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் முடிவடைந்தது. ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டது. அதன்பின்பு அரசியல் போராட்டத்தை முன்னெடுத்தது வருகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலத்தை சீர்குலைப்பதற்காக சர்வதேச நாடுகள் செயற்பட்டுவருகின்றன.

தமிழர்களுக்கு அரசியல் ரீதியான பலம் வந்துவிடக்கூடாது என்பதற்காக அதனை சீர்குலைப்பதற்காக சர்வதேச நாடுகள் செயற்பட்டு வருகின்றன. பேரினவாதிகளின் சொற்படி சர்வதேசம் தமது நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவது தமிழர்களுக்கு இழைக்கப்படுகின்ற துரோகமான செயற்பாடாகும்.

2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி, ஜனாதிபதி முறையை ஒழிப்பேன் எனவும், பிரதமர் ஆட்சியை கொண்டுவருவேன் எனவும் சொன்னார். ஆனால் ஜனாதிபதி மைத்திரி மீண்டும் ஒரு தடவை ஜனாதிபதியாக ஆசைப்படுகின்றார்.

கடந்த காலங்களில் கொடிய ஆட்சியை மேற்கொண்ட மகிந்த ராஜபக்ச மீண்டும் ஜனாதிபதி ஆவதற்கு அல்லது அவரது சகோதரர்களை ஜனாதிபதியாக்கி தமிழர்களின் நியாயமான போராட்டத்தை உடைத்து மீண்டும் அடக்கியாள்வதற்கு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அதனடிப்படையில் ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான 20ஆவது அரசியல் சீர்திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டுவருகின்ற செயற்பாடானது முன்னெடுக்கப்படுகின்ற இக்காலகட்டத்தில் மகிந்த தரப்பினர் ஜனாதிபதி ஆட்சிமுறை கட்டாயமாக இந்த நாட்டிற்குத் தேவை என குரல் எழுப்பி வருகின்றனர்.

மீண்டும் ஜனாதிபதி ஆட்சி உருவாக்கப்படுமானால் இந்த நாட்டில் மீண்டுமொரு பேரினவாத ஆட்சிமுறைமை உள்வாங்கப்பட்டு அதன் மூலம் மீண்டுமொரு யுத்த நிலமை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.

அந்த வாய்ப்பினை தென் பகுதி மக்கள் ஏற்படுத்தக்கூடாது. இந்த ஆட்சிமுறையினை ஒழிக்கவேண்டிய கடமைப்பாடு அனைவருக்கும் உள்ளது. நாங்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து செயற்படவேண்டிய காலத்தில் இருக்கின்றோம்.

வடகிழக்கில் உள்ள அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு சக்தியாக இணைந்து செயற்படும்போதுதான் வடகிழக்கு இணைந்த சமஸ்டி ஆட்சியை நாங்கள் ஏற்படுத்தமுடியும். அதன்மூலமே எங்களை நாங்கள் ஆளக்கூடிய நிலைமை ஏற்படும்.

அனைத்து தமிழர்களும் ஒன்றிணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பினை பலப்படுத்தவேண்டும். அதேபோன்று வடகிழக்கில் உள்ள இதர தமிழ் கட்சிகளும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ஒன்றிணைக்கவேண்டிய கடமைப்பாடு ஒவ்வொரு தமிழருக்கும் இருக்கின்றது.

இந்த மண்ணுக்காக ஆகுதியாக்கிய அனைத்து போராளிகளின் எண்ணங்களையும் நிறைவேற்றவேண்டிய கடமைப்பாடு நம் அனைவருக்கும் உள்ளது.