எந்த எல்லைக்கும் செல்லத் தயார்: வியாழேந்திரன் எம்.பி!

கிழக்கு மாகாணசபையினால் முன்னெடுக்கப்பட்ட தொண்டர் ஆசிரியர்களுக்கான நேர்முக தேர்வில் யுத்த காலத்தின்போது பணியாற்றிய தொண்டர் ஆசிரியர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அவர்களையும் ஆசிரிய பணியில் உள்ளீர்ப்பு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றம் மற்றும் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுசெல்லவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இன்று மாலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“யுத்த காலத்தில் பெரும் கஸ்டங்களுக்கு மத்தியில் சேவையாற்றிய தொண்டர் ஆசிரியர்கள் நேர்முக தேர்வில் புறக்கணிக்கப்பட்டமை கவலைக்குரியது.

அண்மையில் கிழக்கு மாகாணசபையினால் நடாத்தப்பட்ட தொண்டர் ஆசிரியர் நேர்முக தேர்வுக்கு பின்னர் 455பேர் ஆசிரியர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 163 தமிழ் தொண்டர் ஆசிரியர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன், சிங்கள தொண்டராசிரியர்கள் 55பேரும் 228 முஸ்லிம் தொண்டர் ஆசிரியர்களும் ஆசிரியர்களாக நியமனம் பெற்றுள்ளனர்.

இன்று கிழக்கு மாகாணத்தில் திருகோணமலையில் நேர்முகத்தெரிவில் தெரிவு செய்யப்படாதவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். 2005, 2006, 2007ஆம் ஆண்டுகள் மட்டுமே நேர்முகத் தேர்வில் பார்க்கப்பட்டிருக்கின்றது.

1999ஆம் ஆண்டிலிருந்து 2005ஆம் ஆண்டுவரை திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை பகுதிகளில் யுத்தக்கட்டுப்பாட்டு, அதிகஷ்ட பிரதேசங்களிற்குள் தொண்டர் ஆசிரியர்களாக பணிபுரிந்தவர்கள் தமிழர்களே ஆவர்.

ஆசிரியர்கள் போக முடியாத, வாகனங்கள் உட்செல்ல முடியாத, போக்குவரத்து பிரச்சினைகள் இருந்த நிலையில் அவர்கள் தங்களை அர்ப்பணித்து வேலை செய்தனர். அந்த நேரத்தில் இவர்களுடைய கடமை மிக முக்கியமானதாக இருந்தது.

எந்தவித கொடுப்பனவுகளுமின்றி அவர்கள் தங்களுடைய சேவையை வழங்கியிருந்தனர். அவர்கள் 2006, 2007ஆம் ஆண்டுகளில் யுத்த நடவடிக்கை காரணமாக இடம்பெயர்ந்திருந்தார்கள்.

திருகோணமலையில் சம்பூர், கிளிவெட்டி, வெருகல், பள்ளிக்குடியிருப்பு போன்ற பகுதிகளிலிருந்த தொண்டர் ஆசிரியர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் மட்டக்களப்பிற்கு இடம்பெயர்ந்திருந்தனர்.

பலர் திருகோணமலை நகரை நோக்கி இடம்பெயர்ந்திருந்தனர். படுவான்கரை பகுதியிலிருந்தவர்கள் யுத்த நடவடிக்கையின்போது நகரை நோக்கி இடம்பெயர்ந்தனர்.

2006, 2007ஆம் ஆண்டுகளில் இடம்பெயர்ந்த அந்தத் தொண்டர் ஆசிரியர்களுக்கு பாடசாலை சென்று கல்வி கற்பிக்கக்கூடிய சூழல் காணப்படவில்லை. ஆனால் அவர்கள் 1999ஆம் ஆண்டிலிருந்து சேவையாற்றியவர்களாவர்.

அவர்கள் யுத்த நடவடிக்கையால் இடம்பெயர்ந்தபோது அவர்களுடைய ஆவணங்கள் அழிவடைந்துவிட்டன. இன்று அந்தத் தமிழ் தொண்டர் ஆசிரியர்கள் நேர்முகத் தேர்விற்கு சென்றபோது 2005, 2006ஆம் ஆண்டுகளே கருத்தில் கொள்ளப்பட்டன.

அதற்கு முன்னைய ஆண்டுகள் பார்க்கப்படவில்லை. 2005, 2006ஆம் ஆண்டுகளை மட்டுமே கருத்தில்கொண்டு நியமனங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. நியமனப் பட்டியல் விபரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

இதில் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலையைச் சேர்ந்த மிக அவசியமான காலத்தில் கல்விச் சேவையை வழங்கிய 200ற்கும் மேற்பட்ட தமிழ் தொண்டர் ஆசிரியர்கள் நேர்முகத் தேர்விலிருந்து புறந்தள்ளப்பட்டு, நேர்முகத்தேர்வு முறைமையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இதனை எங்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இன்று அந்த ஆசிரியர்கள் திருகோணமலையில் ஜனநாயக மயப்படுத்தப்பட்ட ஒரு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தார்கள்.

கிழக்கு மாகாணசபையின் ஆளுநர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுதொடர்பில் உடனடியாக தலையிட்டு மீள ஒரு நேர்முகத்தேர்வினை நடத்தி 1999ஆம் ஆண்டு தொடங்கி மிகக்கஷ்ட நேரத்தில் தங்களது உயிர்களை துச்சமாக மதித்து எமது மாணவச் செல்வங்களுக்கு கைகொடுத்து உதவியவர்களை தொண்டர் ஆசிரியர் சேவையில் உள்வாங்கி நிரந்தர நியமனத்தை வழங்க வேண்டும்.

தங்போது வெளியிடப்பட்டிருக்கின்ற தொண்டர் ஆசிரியர் நியமனங்களை நாங்கள் பிழையென்று சொல்லவில்லை. ஆனால் உள்வாங்கப்பட வேண்டியவர்கள் பாதிக்கப்பட்டு வெளியில் நிற்கின்றார்கள்.

காலத்தை இழுத்தடிக்காமல் இவர்களுக்குரிய நியமனங்கள் அதே திகதியில் வழங்கப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கை. இது தொடர்பில் எதிர்வரும் 23, 24, 25ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வின்போது கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர், ஜனாதிபதி ஆகியோருடன் பேசவுள்ளோம்.

பாதிக்கப்பட்ட தொண்டர் ஆசிரியர்களுக்கான தீர்வினை அவர்கள் வழங்கவேண்டும். இந்த அரசாங்கம் கூடுதலான அழுத்தங்களை மாகாணத்திற்கு வழங்கி பாதிக்கப்பட்டவர்கள் ஆசிரிய நியமனத்தில் உள்வாங்கப்படவேண்டும்.

அந்த தொண்டர் ஆசிரியர்களுக்கு ஆதரவாக எந்த எல்லைக்கு சென்றும் செயற்படுவதற்கு தயாராக இருக்கின்றோம்.

கடந்த காலத்தில் கிழக்கு மாகாணசபையின் இரண்டு ஆட்சி அதிகாரங்களை கடந்துள்ள போதிலும், அந்த ஆட்சிக்காலத்தில் பெருமளவான சுகாதார தொண்டர்களுக்கு நியமனங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

ஆனால் 1998ஆம் ஆண்டு தொடக்கம் தொடர்ச்சியாக சுகாதார தொண்டர்களாக பணியாற்றிய எத்தனையோ பேர் பாதிக்கப்பட்டனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 64க்கும் மேற்பட்ட சுகாதார தொண்டர்கள் எந்தவித நியமனங்களுக்குள்ளும் உள்வாங்கப்படாமல் உள்ளனர். அவர்களுக்கும் நீதி கிடைக்கவேண்டும்” என தெரிவித்துள்ளார்.