கிளிநொச்சி பொது சன நூலகத்தை விடுவிக்க கோரி கட்டளை தளபதிக்கு கரைச்சி பிரதேச சபை தவிசாளர் கடிதம்!

இராணுவ வசம் உள்ள கிளிநொச்சி பொது சன நூலகத்தை கரைச்சி பிரதேச சபையிடம் ஒப்படைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அ.வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து 571வது கட்டளை தளபதிக்கு எழுதிய கடிதத்தில் இவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்து அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கரைச்சி பிரதேச சபைக்கு சொந்தமான பொது சன நூலகத்தையும், அதனுடன் சேர்ந்த அலுவலக தொகுதியையையும் கடந்த 2009ம் ஆண்டில் இருந்து இராணுவம் ஆக்கிரமித்து வைத்திருக்கிறது.

1975ம் ஆண்டில் திறக்கப்பட்ட கிளிநொச்சி பொது சன நூலகம் எண்கோண வடிவில் நவீன வசதிகளுடன் காணப்பட்டது. கிளிநொச்சி நகரின் அழகை பிரதிபலிக்க கூடியதாகவும், சமூக அறிவுசார் அடையாளமாகவும் அது திகழ்ந்தது.

எனினும் தொடர்ச்சியாக கோரிக்கை விடப்பட்டு வருகின்ற போதும் குறித்த நூலகத்தில் இராணுவம் தங்கியிருப்பது பொருத்தமானது அல்ல.

கிளிநொச்சியில் பல்கலைக்கழகமும், பல் துறை கல்வி நிறுவனங்களும் அதிகரித்துள்ள போதிலும் கிளிநொச்சி மாவட்ட கல்வி நிலை 25 வது இடத்தில் காணப்படுகிறது. இதற்கு உசாத்துனை சார் வள நிலையங்கள் போதாமை முக்கியமானது.

இத்தகைய பிரதான நூலகம் இராணுவ வசம் இருப்பதனால் அறிவு சார் அமைவிடமாக திகழக்கூடிய கிளிநொச்சி பொது சன நூலகத்தை மீள நிர்மாணிப்பதில் பாரிய இடர்களை எதிர் நோக்கி வருகின்றது.

எனவே, நூலகத்தை கரைச்சி பிரதேச சபையிடம் ஒப்படைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அ.வேழமாலிகிதன் சுட்டிக்காட்டியுள்ளார்.