யாழில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினருக்கு உயிர் அச்சுறுத்தல்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வலிகாமம் தெற்கு பிரதேசசபைக்கு போட்டியிட்ட வேட்பாளர் ஒருவருக்கு த.தே.ம.முன்னணியின் ஆதரவாளர்களால் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் நேற்று இரவு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

வலி.தெற்கு பிரதேசசபைக்கு ஏழாலை வட்டாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வேலாயுதம் செல்வகாந்தன் போட்டியிட்ட நிலையில், அதே வட்டாரத்தில் த.தே.ம.முன்னணி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் ஒருவரே வெற்றி பெற்றிருந்தார்.

இருவரும் ஒரே விளையாட்டுக் கழகத்தில் நிர்வாக உறுப்பினராகவும் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் கழகத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக புலம்பெயர் நலன் விரும்பிகளால் ஒரு தொகை பணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இப்பணம் கழக அபிவிருத்திக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். எனினும் த.தே.ம.மு உறுப்பினர் கழக விதிகளை மீறி தன்னிச்சையாக மக்களுக்கு வாழ்வாதார உதவி என்ற

பெயரில் பகிர்ந்தளித்துள்ளார்.

இதையடுத்து செல்வகாந்தன் குறித்த விடயத்தை முகநூலில் பதிவு செய்து புலம்பெயர் நலன்விரும்பிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த த.தே.ம.மு உறுப்பினரின் ஆதரவாளர்கள் முகநூலில் செல்வகாந்தனுடன் முரண்பட்டுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக நேற்று இரவு அவரது வீட்டுக்கு முச்சக்கரவண்டியில் சென்ற நான்கிற்கும் மேற்பட்டோர் செல்வகாந்தனை அச்சுறுத்தி தாக்க முற்பட்டுள்னர்.

இதன்போது வீட்டிலிருந்தவர்கள் சத்தமிட்டதைத் தொடர்ந்து அயலவர்கள் ஒன்று கூடியதை அடுத்து தாக்குதல் நடத்த வந்தவர்கள் திரும்பிச்சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக செல்வகாந்தனால் நேற்று இரவு சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அச்சுறுத்தியவர்களை தன்னால் அடையாளம் காட்ட முடியும் என்றும் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.